மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது; சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் !!!
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வை சேர்ந்த சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை அடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்.பி பதவியை மே 7-ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் இடையே வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கியது. வரும் 8-ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அதனைத் தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது.
வேட்பு மனுவை திரும்ப பெற ஜூன் 11 கடைசி நாளாகும். போட்டி இருந்தால் ஜூன் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மேலும், அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் சுயேட்சை வேட்பாளர்களான தேர்தல் மன்னன் பத்மராஜன் மற்றும் அக்னி ஆழ்வார் ஆகியோர் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் மன்னன் பத்மராஜன், "255-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் விஜய் ஆகியோருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். 1988-இல் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியதில் இருந்து தற்போது வரை தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவேன். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற முயற்சியை செய்து வருகிறேன். பலர் வேட்பு மனு தாக்கல் செய்ய தயங்குகிறார்கள். அதுபோன்று தயக்கமில்லாமல் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்து உள்ளேன்" என்றார்.
மற்றொரு சுயேட்சை வேட்பாளரான அக்னி ஆழ்வார், "59-வது முறையாக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். முதல்வர் விஜய் எதிர்த்து பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு உள்ளேன். அதேபோல் உதயநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளேன். முதல் நாளாக இன்றே வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளேன். 2009 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறேன். மக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்" என தெரிவித்தார்.

0 கருத்துகள்: