வெள்ளி, 5 ஜூன், 2026

காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக; 'இந்தியா கூட்டணி'யில் இருந்து வெளியேறுகிறதா ?

SHARE

 காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக; 'இந்தியா கூட்டணி'யில் இருந்து வெளியேறுகிறதா ?

டெல்லியில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், 

'டெல்லியில் உள்ள 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வஃக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.

அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்து இருக்கிறது.

இந்தியா” கூட்டணி தொடங்கியதில் இருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சனைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றி இருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் 'இந்தியா கூட்டணி' கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

இக்கூட்டத்தில் பங்கேற்காத அதே நேரத்தில்., இந்தக் கூட்டத்தில் இடம்பெற்று உள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சனைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக த.வெ.க வுக்கு ஆதரவு அளித்தது. இதனால் தி.மு.க உடனான அதன் 20 ஆண்டு கால நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: