வெள்ளி, 5 ஜூன், 2026

த.வெ.க எம்.எல்.ஏ வுக்கு 'புரோட்டோகால்' தெரியவில்லை; அரசு நிகழ்ச்சியில் விளக்கேற்றிய விவகாரம் குறித்து மேயர் பிரியா விளக்கம் !!!

SHARE

 த.வெ.க எம்.எல்.ஏ வுக்கு 'புரோட்டோகால்' தெரியவில்லை; அரசு நிகழ்ச்சியில் விளக்கேற்றிய விவகாரம் குறித்து மேயர் பிரியா விளக்கம் !!!

பள்ளி கட்டடத் திறப்பு நிகழ்ச்சியில் த.வெ.க எம்.எல்.ஏ பல்லவியை மேயர் பிரியா புறக்கணித்ததாக எழுந்த புகாரில், த.வெ.க எம்.எல்.ஏவுக்கு புரோட்டோகால் தெரியவில்லை, நான் மரபுப்படியே செயல்பட்டேன் என்று சென்னை மேயர் பிரியா விளக்கம் அளித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க நகர் மண்டலம் புளியந்தோப்பு பகுதியில் ரூ. 3.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சென்னை உருது நடுநிலைப் பள்ளி கட்டடத்தை பன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரு.வி.க நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ பல்லவி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் ஒன்றாக இணைந்து புதிதாக கட்டப்பட்டு உள்ள உருது பள்ளி கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து, மேயர் பிரியா மெழுகுவர்த்தியின் மூலமாக குத்து விளக்கை ஏற்றினார். அதன் பின்னர் இரண்டாவதாக எம்.எல்.ஏ பல்லவி குத்துவிளக்கை ஏற்ற முயன்றார்.

ஆனால் மேயர், மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏவிடம் தராமல், அவரின் கையை உதறி விட்டு அருகில் இருந்த இணை ஆணையர் கற்பகத்திடம் குத்துவிளக்கை ஏற்றுங்கள் என்று கூறி, அவரிடம் வெழுகுவர்த்தியை வழங்கினார். இதன் காரணமாக கோபம் அடைந்த எம்.எல்.ஏ பல்லவி நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து திரு.வி.க நகர் நம்மாழ்வார்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் மேயர் பிரியா, எம்.எல்.ஏ பல்லவி ஆகியோர் மீண்டும் ஒன்றாக கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலும் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் முதலில் மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றினார். அவரைத் தொடர்ந்து, இரண்டாவது எம்.எல்.ஏ பல்லவியிடம் ஏற்ற சொல்லி மெழுகுவர்த்தியை வழங்கினார். ஆனால், இந்த முறை எம்.எல்.ஏ பல்லவி வாங்க மறுத்து விட்டார். இதனால் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம் கேட்டபோது,

 ”கட்டட திறப்பு நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ என்ற முறையில் மாநகராட்சி சார்பில் பல்லவியை அழைத்தோம். அவர் எங்களுடன் தான் ரிப்பனை வெட்டினார். ஆனால், அரசு நிகழ்ச்சிகளில் புரோட்டோகால் படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தான் முதலில் குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்குப் பின்பே எம்.எல்.ஏ ஏற்ற வேண்டும். அவருக்கு இது தெரியவில்லை. அவர் கோபித்துக் கொண்டார்.

இதுவே அமைச்சராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிறகு தான் எனது புரோட்டோகால் படி மேயரான நான் குத்துவிளக்கு ஏற்ற முடியும். இது தான் நடைமுறை; இதுதான் நடந்தது. நான் மரபுப்படியே செயல்பட்டேன்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எம்.எல்.ஏ பல்லவி செய்தியாளர்களிடம் கூறியபோது,

 "திரு.வி.க நகர் தொகுதிக்கு தி.மு.க இதுவரை எதுவும் செய்யவில்லை. ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க வினர் இன்னமும் நாங்கள் தான் என்ற ஆணவத்துடனும், திமிருடனும் இருக்கின்றனர். இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியாது. விட்டுக் கொடுப்பதால் நாங்கள் கெட்டுப்போக மாட்டோம். என்ன செய்தாலும் எங்கள் தளபதியே (விஜய்) பொறுமையாக இருக்கிறார். அவரை தொடரும் நாங்களும் பொறுமையாக இருப்போம். பொறுமையாக இருப்பதால் நாங்கள் தாழ்ந்து போக மாட்டோம், பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: