வெள்ளி, 5 ஜூன், 2026

மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: ஒருவர் கைது !!!

SHARE

 மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: ஒருவர் கைது !!!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரத்தில் சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார், ஒப்பந்த ஊழியர் ஒருவரை கைது செய்து உள்ளனர். திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளில் பல ரகசிய கோப்புகள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சென்னை மின்வாரிய தலைமையகமான என்.பி.கே.ஆர்.ஆர். மாளிகையின் 5-வது தளத்தில் இயங்கி வரும் நீர்மின் பிரிவின் (Hydro) உதவி செயற்பொறியாளராக (AEE) மலர்விழி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் இவர், தான் பயன்படுத்தி வந்த அலுவலகக் கணினியில் உள்ள கோப்புகள் அனைத்தும் மாயமானதாக புகார் அளித்தார்.

இதன் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், கணினியில் இருந்த ஹார்ட் டிஸ்க்குகள் முற்றிலும் காணாமல் போயிருப்பதை அவர் உறுதி செய்தனர். தொடர்ந்து, அலுவலகத்தின் மிக முக்கியமான மற்றும் ரகசிய கோப்புகள், தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் திருடப்பட்டு இருப்பது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் மலர்விழி புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட சிந்தாதிரிப்பேட்டை போலீசார், 305 BNS சட்டப்பிரிவின் கீழ் திருட்டு வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கணினி பராமரிப்பு பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கணினி ஹார்டு டிஸ்க்குகளையும், மேலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட டிஸ்குகளையும் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து, ஒப்பந்த ஊழியர் கோபிநாத்தை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து சுமார் 16 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹார்டு டிஸ்க்குகளில் இருந்த ஆவணங்கள், கோப்புகளை மீட்டெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், பணத்திற்காக மட்டுமே இந்த ஹார்ட் டிஸ்க்களை திருடியதாக கோபிநாத் வாக்குமூலம் அளித்த நிலையில், அவரிடம் பணம் கொடுத்தது யார்? இந்த ஹார்டு டிஸ்க்குகளை வாங்கியது யார் ? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஹார்டு டிஸ்க்குளில் பல்வேறு அரசுத் துறைகளில் டெண்டர் விடுவது, கொள்முதல் செய்வது, விசாரணை ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோப்புகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: