கோவையில் பேக்கரி, பெட்டிக் கடையை உடைத்துத் துணிகரத் திருட்டு - கல்லாப் பெட்டியில் பணம், சிகரெட் பண்டில்களை அள்ளிய சி.சி.டி.வி காட்சிகள் வைரல் !!!
“கடந்த வாரத்தில் மட்டும் 3 திருட்டுகள்”: அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்களால் வியாபாரிகள் அதிர்ச்சி !!!
சி.சி.டி.வி சிக்காமல் இருக்க அணிந்து இருந்த பனியனில் மூஞ்சை மூடி பண்டில் பண்டிலாக சிகரட்டையும் பணத்தையும் திருடி சென்ற மர்ம நபர்
கோவை, மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில், திருச்சி சாலை மற்றும் சேலம் - கொச்சின் பைபாஸ் சாலை இணையும் நாற்சந்தி சந்திப்பு உள்ளது. எப்போதும் வாகனப் போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இப்பகுதியில் கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கார்த்திக் கடையைப் பூட்டிவிட்டுச் சென்று உள்ளார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பேக்கரியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து உள்ளார். பின்னர் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த 7,000 ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த 10,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளார்.
மறுநாள் காலை கடை திறக்க வந்த போது தான் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்தது.
அதேபோல பைபாஸ் சாலையில் உள்ள மற்றொரு பெட்டிக்கடை ஒன்றிலும் 8000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை மர்ம நபர் திருடி சென்று உள்ளார்,
இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு இடையே, கடையில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் மர்ம நபர் கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை எடுப்பதும், சிகரெட் பாக்கெட்டுகளைத் திருடிச் செல்வதும் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சூலூர் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று கடைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அந்த சுவடு மாறுவதற்குள், தற்போதும் அதே பாணியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியச் சாலையிலேயே இந்த துணிகரத் திருட்டு நடந்து உள்ளது அப்பகுதி மக்கள் இடையேயும், வியாபாரிகள் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: