புதன், 17 ஜூன், 2026

நீட் அநீதிக்கு இறையான மாணவி; உடலை வாங்க மறுப்பு” ; கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் - முந்தைய அரசு கொடுத்தது போல் தற்போதைய அரசு நிவாரணம் தராதது ஏன் ? அலட்சியம் என குற்றச்சாட்டு !!!

SHARE

நீட் அநீதிக்கு இறையான மாணவி; உடலை வாங்க மறுப்பு” ; கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் - முந்தைய அரசு கொடுத்தது போல் தற்போதைய அரசு நிவாரணம் தராதது ஏன் ? அலட்சியம் என குற்றச்சாட்டு !!!

நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனு கீர்த்தனாவுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்கப் போவது இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவராக இருந்து வருபவர் செந்தில் பிரபு. இவரது மகள் அனு கீர்த்தனா நீட் தேர்வு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு , இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனு கீர்த்தனாவின்  குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  100 க்கும் மேற்பட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் இ.எஸ்.ஐ  மருத்துவமனை வளாகத்தில் இன்று  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மாணவி அனு கீர்த்தனாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது. ஆனால் உரிய நீதி கிடைக்கும் வரை  மாணவியின் உடலை பெற போவதில்லை எனவும் , நீதி கிடைக்கும் வரை மருத்துவமனை வளாகத்தில்  போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த காலங்களில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அப்போதைய அரசு உடனுக்குடன் இழப்பீடுகளை வழங்கியது எனவும் ஆனால் தற்போதைய அரசிடம் இருந்து இழப்பீடு , நிவாரணம் குறித்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் இங்குள்ள அமைச்சர்கள் யாரும் நேரடியாக பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை எனவும் இது ஒரு மோசமான நடவடிக்கையாக பார்க்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் இதுகுறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வரை மருத்துவமனை வளாகத்தினை விட்டு வெளியேற போவதில்லை எனவும் மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் நீட் தேர்வு முறைகேடு லட்சகணக்கான மாணவர்களை பாதித்துள்ளது எனவும்,இதற்கு பொறுப்பேற்று 

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும் என மறியல் போராட்டத்தின் போது  வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


SHARE

Author: verified_user

0 கருத்துகள்: