மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் வேண்டாம் - காங்கிரஸுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல் !!!
மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யக் கூடாது என பி .ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை தியாகராய நகரில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”காவிரி பிரச்சனை அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்கிறது. டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாதன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பிரதமராக வி.பி.சிங் இருந்த போது, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வாக்களிப்புடன் உச்சநீதிமன்றத்திற்கு இணையான அங்கீகாரம் கொண்ட காவேரி நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டது.
2007-ல் வெளியான அதன் இறுதி தீர்ப்பில் காவிரியின் குறுக்கே கர்நாடகா, தமிழ்நாடு அணை கட்டுவதற்கு உரிமை இல்லை என்றும், தமிழ்நாட்டில் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்டக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் நேரடி கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. 2020-ம் ஆண்டு கர்நாடகாவின் அன்றைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து காவிரி மேலாண்மை ஆணையத்திலும், மத்திய நீர்வள ஆணையத்திலும் சமர்ப்பித்தார்.
ஆனால் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு உரிமை இல்லை என விவாதிக்க மறுத்து, நிராகரித்து உள்ளது. ஆனால் மத்திய நீர்வள ஆணையம் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் வைத்து, தமிழ்நாட்டை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில், மக்களின் குரலாக மேகதாது அணை கட்டுவதை நிராகரிக்க வேண்டும், அணை கட்டப்பட்டால், 5 கோடிக்கு மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரங்கள் பறிபோகும். விவசாய தொழிலாளர்களும் அகதிகளாக வெளியேறுவார்கள், உணவு உற்பத்தி அடியோடு அழியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு மக்களின் நலன் காக்கும் விதமாக, மேகதாது அணை கட்டும் வரைவு திட்ட அறிக்கையை முழுமையாக நிராகரிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூலை மாதத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெற்று உள்ளது. கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தனது சுயநலத்திற்காக அங்கு அணை கட்ட முயற்சிக்கிறார். ஆனால் கர்நாடகாவில் இருக்கும் விவசாயிகள் அதனை எதிர்க்கின்றனர். எனவே மேகதாது அணை விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு இல்லாமல், அரசியல் செய்யாமல் இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்: