வியாழன், 11 ஜூன், 2026

கோவை அரசு மருத்துவமனையில் புகுந்த கண்ணாடி விரியன் ; நச்சுப் பாம்பால் பெரும் பரபரப்பு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் !!!

SHARE

 கோவை அரசு மருத்துவமனையில் புகுந்த கண்ணாடி விரியன் ; நச்சுப் பாம்பால் பெரும் பரபரப்பு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் !!!

​ கோவை, துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வளாகத்திற்குள் இன்று திடீரென புகுந்த நச்சுத் தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணியில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மத்தியில் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டது.

 வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில், திடீரென இந்த நச்சுப்பாம்பு ஊர்ந்து வந்ததைக் கண்ட அங்கு இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு, உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

​தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தங்களின் பிரத்யேக உபகரணங்களைப் பயன்படுத்தி, மிகவும் லாவகமாக அந்தப் பெரிய கண்ணாடி விரியன் பாம்பை உயிரோடு பிடித்தனர். நல்வாய்ப்பாக இந்தத் சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்போ அல்லது அசம்பாவிதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கின்றன. 

பிடிபட்ட பாம்பு பின்னர் பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விடப்படும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

 அரசு மருத்துவமனை போன்ற பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு முக்கியப் பகுதியில் நச்சுப்பாம்பு புகுந்த இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: