வியாழன், 11 ஜூன், 2026

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை வழக்கு ; கைதான 2 குற்றவாளிகள் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் - குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது ....

SHARE

கோவை, சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை வழக்கு ; கைதான 2 குற்றவாளிகள் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் - குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட உள்ளது ....

கோவை, சூலூர் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இரண்டு பேர் மீது 819 பக்க குற்றப்பத்திரிக்கை போலீசார் நேற்று போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். குற்றவாளிகளிடம் குற்ற பத்திரிகையை வழங்க இன்று நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மாதம் 21 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் 30 நாட்களுக்குள் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க காவல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இதற்காக கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டது. கார்த்திக், மோகன் ஆகியோரை கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் கரிகாலன் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த கண்ணம்பாளையம் குளக்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சம்பவம் குறித்து கார்த்தி நடித்துக் காட்டினார்.

அதே போன்று அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் சம்பவ இடத்தில் நடித்து காட்டி உள்ளார். அவற்றை போலீசார் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். மூன்று நாள் விசாரணை முடிந்ததும் அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின்னர் கடந்த சில நாட்களாக போலீசார் குற்றப்பத்திரிக்கை இறுதி செய்யும் பணிகள் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் சிறுமி கொலை வழக்கில் நேற்று சூலூர் போலீசார் கோவை போக்சோ நீதிமன்றத்தில் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதை ஆன்லைன் மூலமாக இ - பைலிங் முறையில் தாக்கல் செய்து உள்ளனர். பாலியல் பலாத்கார வழக்கில் போலீசாரின் விசாரணை அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்செயல் விவரம், தடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்று இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் 108 சாட்சிகள், 215 ஆவணங்கள், நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைதான கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து 18 நாட்கள் போலீசார் இந்த வழக்கினை விசாரித்து நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றப்பத்திரிக்கையின் நகல் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளிடம் அளிக்க தற்போது பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். இந்த வழக்கு துரிதமான விசாரணை நடைபெற்று உள்ளதால் சில மாதங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: