சட்டப் பேரவையில் குதிரை பேர புகார் - சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !!!
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைவதற்காக 'குதிரை பேரம்' நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்த 4 பேர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
எம். சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்து உள்ள அந்த மனுவில், த.வெ.க பொதுச் செயலாளர் என். ஆனந்த் (எ) புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை), பி. சத்தியபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
வழக்கறிஞர் அசிந்தியா திவாரி மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், விசாரணையை நிறைவு செய்து, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது செல்லுபடியாகும் உறுதியான மற்றும் நியாயமான காரணங்கள் ஏதுமின்றி சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு 'குதிரை பேரம்' நடத்துவதை தடுப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை வகுக்க, இந்திய அரசியலமைப் பின் 142-வது பிரிவின் கீழ் உள்ள முழு அதிகாரத்தை பயன்படுத்துமாறும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், நீதிமன்றத்தால் இதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை, அந்த நான்கு முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் சுயேட்சையாகளாகவோ அல்லது ஏதேனும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடனோ இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே 4-ந் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்த திராவிடக் கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டப் பேரவையில் த.வெ.க தனித்து பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ க்களின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைத்தார். அவர் கடந்த 10-ந் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.
பின்னர் மே 13 அன்று சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அ.தி.மு.க வின் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 25 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. அப்போது குதிரை பேரம் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் விஜய் மறுத்தார்.

0 கருத்துகள்: