செவ்வாய், 30 ஜூன், 2026

விடிய, விடிய டாஸ்மாக்... வேலைக்கு போகாத ஆண்கள்” ; கோவையில் கடையை மூடக்கோரி பெண்கள் அதிரடி சாலை மறியல் - குடிமகனுடன் கைகலப்பானதால் பரபரப்பு !!!

SHARE

 விடிய, விடிய டாஸ்மாக்... வேலைக்கு போகாத ஆண்கள்” ; கோவையில் கடையை மூடக்கோரி பெண்கள் அதிரடி சாலை மறியல் - குடிமகனுடன் கைகலப்பானதால் பரபரப்பு !!!

​2 மணி நேரமாகியும் வராத அதிகாரிகள் – தொண்டாமுத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு !!!

​ “விடிய விடிய மது விற்பனை நடப்பதால் ஆண்கள் யாரும் வேலைக்குப் போவதில்லை; பெண்கள், பள்ளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என ஆவேசம் அடைந்த கோவை புத்தூர் பகுதி பெண்கள், இன்று காலை திடீரெனத் திரண்டு டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் குதித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை (கடை எண்: 2240) இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் தங்களுக்கு நிம்மதியே இல்லை என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். இங்கு விடியற்காலை முதலே சட்டவிரோதமாக மது விற்பனை ஜோராக நடப்பதால், ஆண்கள் இரவு பகல் பாராமல் மது குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடையைக் கடந்து தான் பெண்கள் வேலைக்கும், பள்ளி குழந்தைகள் கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளது. ஆனால், அங்கு எப்போதும் கூட்டமாக நிற்கும் குடிமகன்களின் அநாகரிகத் தொல்லையால் நிம்மதியாகச் சாலையைக் கடக்க முடியாத அவல நிலை நீடிக்கிறது.

​கடந்த சில தினங்களாக இந்த கடையில் இருந்து மதுபானங்களை ஊருக்குள் கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்து உள்ளது. கடந்த ஆட்சியின் போதே இந்த கடையை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய ஆட்சியிலாவது, அகற்றப்படும் கடைகளின் பட்டியலில் இந்த புத்தூர் டாஸ்மாக் கடை இடம்பெறும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியதால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று காலை தொண்டாமுத்தூர் - போளுவாம்பட்டி செல்லும் முக்கியச் சாலையில் திடீரெனத் திரண்டு மறியலில் குதித்தனர்.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பொதுமக்களைக் கலைந்து போகச் சொன்னதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில், அந்த வழியாகச் சாலையைக் கடக்க முயன்ற போதை ஆசாமி ஒருவருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மோதிக் கொண்டதால் அந்த இடமே ரணகளமாக மாறியது.

​இதனைத் தொடர்ந்து போலீஸார் அதிரடியாகச் செயல்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டவர்களைப் பலவந்தமாக விலக்கி விட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராட்டம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கடந்தும், இது குறித்து போலீஸார் மற்றும் பொதுமக்கள் தகவல் கொடுத்தும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாட்சியர் என எந்தவொரு வருவாய்த்துறை அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

“டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் ஓயாது!” எனப் பெண்கள் உறுதியாகச் சாலையில் அமர்ந்து இருப்பதால், புத்தூர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: