ஞாயிறு, 7 ஜூன், 2026

ஒரு மேயர் இடத்தையாவது த.வெ.க வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்; ஆர்.எஸ்.பாரதி சவால் !!!

SHARE

 ஒரு மேயர் இடத்தையாவது த.வெ.க வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்; ஆர்.எஸ்.பாரதி சவால் !!!

ஒரு மேயர் இடத்திலாவது தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தி.மு.க சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகைப் புரிந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

 "ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள லாரி. பல்வேறு கட்சிகள் மாறி வந்து தற்போது த.வெ.க வுக்கு தாவி உள்ளார். அவர் இந்த கட்சியில் எத்தனை நாட்கள் தாக்குப் பிடிப்பார் என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க இந்த இரண்டு கட்சிகளிலும் மாறுவது வேறு. ஆனால் பல கட்சிகள் மாறி வருபவர்கள் ஓரிடத்தில் நிலையாக நிற்க மாட்டார்கள். அதற்கு இன்றைய உதாரணம் ஆதவ் அர்ஜுனா.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைப்பிடிப்பது போல், ஆதவ் அர்ஜுனாவிற்கு வாழ்வு வந்து உள்ளது. அவருக்கு தி.மு.க வின் வரலாறு தெரியாது. 76 ஆண்டு கால தி.மு.க வரலாற்றில் இவரைப் போன்ற பல பேரை நாங்கள் பார்த்து உள்ளோம். ஆதவ் அர்ஜுனா போன்று பல பேர் இருந்தனர். அவர்கள் எல்லாம் இன்று இல்லை. புது துடைப்பம் கொஞ்சம் வேகமாகத் தான் பெருக்கும் என்பார்கள். அதே போல் ஆதவ் அர்ஜுனா ஒரு புது துடைப்பம். ரொம்ப வேகமாக பேசினால் மக்கள் அதற்கு திரும்ப பதில் அடி கொடுப்பார்கள்; இதுதான் தமிழ்நாட்டின் வரலாறு, இதை ஆதவ் அர்ஜுனா புரிந்து கொள்ள வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்திலாவது வர முடியுமா என்று ஆதவ் அர்ஜுனா சவால் விடுகிறார். அடிமடையனுக்கு கூட தெரியும் 1984 தேர்தல் குறித்து. தி.மு.க தோன்றிய காலத்தில் இருந்து பல தோல்விகளையும் கண்டு உள்ளோம், எங்களைப் போல வெற்றி பெற்றவர்களும் கிடையாது. 1957- லிருந்து இதுவரையில் திமுகவுக்கு என்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அது எந்த காலத்திலும் குறைந்தது கிடையாது, இவ்வளவு பேர் அணி மாறுகிறார்களே. தி.மு.க வில் இருந்து யாராவது அணி மாறி உள்ளனரா ? தி.மு.க தொண்டர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.

த.வெ.க கொள்கையைச் சொல்லி லட்சியத்தை சொல்லி ஓட்டுக்கேட்டு வெற்றி பெற்றார்களா? யார் எம்.எல்.ஏ என்று கூட தெரியாமல் விஜய்க்காக வாக்களித்து உள்ளனர். எம்.எல்.ஏ பெயர், மந்திரி பெயர் கூட தொகுதி மக்களுக்கு தெரியாது? லாட்டரி சீட்டு அடித்தது போல் ஒரு லக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அடித்து உள்ளது. அதுக்கூட முழு மெஜாரிட்டி கிடையாது. இந்த தேர்தல் ஒரு விபத்து. உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூர்காரர்கள் யார் தகுதியானவர்களோ அவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

மாணிக்கம் தாகூர் எப்படி வெற்றி பெற்றார் ? என்று அவருக்கென்று ஒரு மனசாட்சி இருந்தால் முதலில் அவர் அதை சொல்லட்டும். அவர் வெற்றியை அவர் முதலில் ஆய்வு செய்யட்டும்; அப்புறம் தி.மு.க பற்றி பேசட்டும். எம்.ஜி.ஆரை விட பெரிய தலைவர்கள் விஜய்யும் அல்ல, மற்றவர்களும் அல்ல. ஆனால் 1984 தேர்தலுக்கு பின்னர் 1986 உள்ளாட்சித் தேர்தலில் 102 நகராட்சியில் 90 நகராட்சியில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆறு மாதத்தில் முடிந்தால் உள்ளாட்சித் தேர்தலை வையுங்கள்; ஒரு மேயர் இடத்திலாவது தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்த சவாலை ஏற்க தமிழக வெற்றிக் கழகம் தயாரா?

இனி மேல் எந்த காலத்திலும் முதுகில் குத்து விட்டு ஓடியவர்களை தி.மு.க வில் மீண்டும் சேர்க்க மாட்டோம், அவர்களோடு ஒட்டும், உறவும் கிடையாது. இனி கட்சித் தொண்டர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் எங்கு உள்ளதோ அந்த கூட்டணியுடன் நாங்கள் இருக்க மாட்டோம். எதிர்காலத்தில் பா.ஜ.க வோடு கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பு சத்தியமாக இல்லை. யார் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் போனாலும் நாங்கள் கவலைப்படப் போவதில்லை; ஜெயலலிதாவையே தோற்கடித்தவர்கள் நாங்கள்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: