பாருக்கு வந்த இளைஞர் மீது டாஸ்மாக் ஊழியர்கள் தாக்குதல் - பொதுமக்கள் சாலை மறியல் !!!
டாஸ்மாக் கடைக்கு வெளியில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து வந்த காரணத்தினால் இளைஞர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்படட்து.
சென்னை ஈ.சி.ஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (30). இவர் வாய் பேச முடியாதவர்கள் என தெரிகிறது. நேற்றிரவு 8 மணி அளவில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார். அங்கு அவர் வெளியில் இருந்து வாங்கிய தண்ணீர் பாட்டியலை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட தனியார் பார் ஊழியர்கள், வெளியில் இருந்து தண்ணீர் எடுத்து வரக்கூடாது என அவரை மார்பில் எட்டி உதைத்து தாக்கி உள்ளனர். பாரில் வேலை செய்பவர்கள் உட்பட சுமார் 10 பேர் அருணை கண் மூடித்தனமாக தாக்கி உள்ளனர். அத்துடன் அவர்கள் அருணின் தலையில் பாட்டிலை கொண்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞரை தாக்கி காயப்படுத்திய பார் ஊழியர்களை கண்டித்து, அங்கு சென்று முறையிட்டு உள்ளனர். ஆனால், பார் ஊழியர்கள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதுடன், அப்படித் தான் செய்வோம், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என பேசி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பார் ஊழியர்களை கண்டித்து ஈ.சி.ஆர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இளைஞரை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காவல்துறையினரிடம் வலியுறுத்தினர்.
இதனை அடுத்து, இளைஞரை தாக்கிய பார் ஊழியர்கள் சிலரை காவல் துறையினர் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடையில் இளைஞர் மீது ஊழியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: