குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் ம.தி.மு.க தொண்டர்கள் அதிருப்தி : மனம் திறந்த துரை வைகோ !!!
கடந்த தேர்தலில் தங்களுக்கு குறைவான தொகுதி ஒதுக்கப்பட்டதால் ம.தி.மு.க தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக துரை வைகோ தெரிவித்து உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ம.தி.மு.க சந்தித்த மிகப்பெரிய சிக்கல் சின்னம் தொடர்பானது. உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால், ம.தி.மு.க வில் உள்ள ஒரு அடிப்படை உறுப்பினர் கூட தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சியில் இணைந்த பிறகே அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை இருக்கிறது.
இது ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. கூட்டணியில் உள்ள சிறிய இயக்கங்களுக்கு தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடும் உரிமை மறுக்கப்படுகிறது. அதுகுறித்து உரிய பரிசீலனை மேற்கொள்ளாமல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் கடந்த பத்து ஆண்டுகளாக மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் பல்வேறு கருத்து வேறுபாடுகளைக் கடந்து இணைந்து செயல்பட்டோம்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சாதி, மதம் மற்றும் பண அரசியலைக் கடந்து ஒரு புதிய அரசியல் மாற்றம் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டின் குடிமகனாக அந்த மாற்றத்தை வரவேற்கிறேன். அந்த மாற்றத்தை உருவாக்கியதில் விஜய் வெற்றி பெற்று உள்ளார். மூப்பனார், வைகோ மற்றும் விஜயகாந்த் ஆகியோர் முயன்ற அரசியல் மாற்றத்தை விஜய் சாதித்து உள்ளார். மக்கள் ஏன் விஜய்க்கு வாக்களித்தார்கள், ஏன் ? மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை என்பதை அனைத்து அரசியல் இயக்கங்களும் சுயபரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.
இதனை ‘ஜென்-இசட்’ வாக்காளர்களின் தாக்கம் அல்லது இளைஞர்களை ஏமாற்றி பெற்ற வாக்குகள் எனக் குறைத்து மதிப்பிடக் கூடாது. தவறுகளைத் திருத்திக்கொள்ளாத அரசியல் இயக்கங்கள் முன்னேற முடியாது. ம.தி.மு.க தொண்டர்களில் பெரும்பாலானோருக்கு கடந்த தேர்தலில் சின்னம் ஒதுக்கப்பட்ட விதம், தொகுதிகள் குறைக்கப்பட்டது, வைகோவுக்கு நாடாளுமன்ற வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி இருக்கிறது" என்றார்.
மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்றும், கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றும் துரை வைகோ தெரிவித்தார்.

0 கருத்துகள்: