கோவை மாவட்டத்தில் நடந்த திடீர் தீவிர சோதனை ; சுமார் 20 கிலோ கஞ்சா, செயற்கை உயர் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் - 10 பேர் கைது, 13 வாகனங்கள் பறிமுதல் !!!
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை" என்ற இலக்கை முன்னிறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் நேரடி மேற்பார்வையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து
அதன் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் தங்கியுள்ள பகுதிகள், போதைப்பொருள் நடமாட்டம் குறித்த தகவல்கள் பெறப்பட்ட இடங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இன்று கோவில்பாளையம், செட்டிபாளையம் மற்றும் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை முற்றிலும் கட்டுப்படுத்துவதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, 20.040 கிலோ கஞ்சா, உயரக போதைப்பொருட்களான ( Synthetic drugs) கஞ்சா ஆயில் (Cannabis Oll), Methamphetamine மற்றும் LSD Stamp, ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் நிலையம், மதுக்கரை காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு பிரிவுகளில், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை யாரிடம் இருந்து பெற்றனர், அதன் விநியோகச் சங்கிலியில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் ? என்பது குறித்து கண்டறிய காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேலும் கைது நடவடிக்கைகள் மற்றும் தொடர் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.

0 கருத்துகள்: