ஆள்மாறாட்டக் கடத்தலில் ‘பல்பு’ வாங்கிய கடத்தல் கும்பல்: கோவையில் காங்கிரஸ் பிரமுகரை கடத்தி ரூ.2 கோடி கேட்ட விவகாரம் - திருச்சிக் கொள்ளையன் கரூரில் கைது !!!
தப்பியோடிய 5 ரவுடிகளுக்கு சிங்காநல்லூர் போலீஸ் வலைவீச்சு!
கோவை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் தனசேகர் (வயது 53), காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவர் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் முன்பு நின்ற காரை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது காரில் வந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் தனசேகரை, தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.
பின்னர் அவரை விடுவிக்க ரூ. 2 கோடி கேட்டு மிரட்டினர். அவர் தன்னிடம் பணம் இல்லை என்றபோதுதான், வேறு நபரை கடத்துவதற்கு பதிலாக தனசேகரை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பல் தனசேகரிடம் இருந்த செல்போன், கார் சாவி மற்றும் வீட்டுச்சாவியை பறித்துக்கொண்டு அவரை பாலக்காடு ரோட்டில் இறக்கிவிட்டு சென்றது.
வாலிபர் கைது
இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 5 பேர் கொண்ட கும்பலுக்கு போத்தனூரை சேர்ந்த போலீஸ் கார்த்தி என்பவர் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கார்த்தி, திருச்சியை சேர்ந்த வைரபெருமாள் (30) மூர்த்தி, அன்பு மற்றும் நெல்லையை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் பகுதியில் வைரபெருமாள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் தலைமையிலான போலீசார் கரூருக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள காந்தி கிராமம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருந்த வைரபெருமாளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைகாக உள்ள போலீஸ் கார்த்தி, மூர்த்தி, அன்பு உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது-
போலீஸ் கார்த்தி மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. அவருக்கு நண்பர்கள் மூலம் சிறையில் இருந்து வெளியே வந்த பலர் அறிமுகம் ஆகி உள்ளனர். அவர்களை அவர் குற்ற செயல்களில் ஈடுபட பயன்படுத்தி உள்ளார். அதன்படிதான் திருச்சியை சேர்ந்த வைரபெருமாள் அறிமுகம் ஆனார். அவர் மூலம் பலர் அறிமுகம் ஆனார்கள்.
5 பேருக்கு வலைவீச்சு
அதன்படிதான் கோவையை சேர்ந்த தனசேகர் என்ற தொழில் அதிபரை கடத்த வந்தபோது, ஆள்மாறாட்டத்தில் காங்கிரஸ் பிரமுகரை கடத்தி உள்ளனர். இதில் தற்போது கைதான வைரபெருமாள் மீது ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுபோன்று தலைமறைவாக உள்ள 5 பேர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன. எனவே அந்த 5 பேரையும் தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 கருத்துகள்: