புதன், 22 ஜூலை, 2026

ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட்: முழுவதுமாக நேரலை செய்யப்படும் என பேரவைத் தலைவர் உறுதி !!!

SHARE

 ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட்: முழுவதுமாக நேரலை செய்யப்படும் என பேரவைத் தலைவர் உறுதி !!!

தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5 அன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 181(1)-இன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முழு சட்டப்பேரவை நிகழ்வும் நேரலை செய்யப்படும் என்று உறுதி செய்து உள்ளார்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதன்கிழமை சட்டப்பேரவை கூடி காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அறிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2026 ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடுகிறது. அன்றைய தினம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181-ன் கீழ், 2026–2027ஆம் ஆண்டிற்கான, திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இதற்காக ஆகஸ்ட் 5-ஆம் தேதியை மாநில ஆளுநர் குறித்து உள்ளார்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் சட்டபேரவைக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள், வாக்காளர்கள் மட்டுமல்லாமல் வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என்று நம்புகிறேன். பட்ஜெட் தாக்கல் முழுமையாக நேரலையாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்” என்று கூறினார்.

கடந்த பிப்ரவரி 19, 2026 அன்று, சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருந்ததால் அன்றைய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில், புதிய த.வெ.க அரசின் முதல் திருத்திய பட்ஜெட்டை ஆகஸ்ட் 5 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: