புதன், 22 ஜூலை, 2026

ஜனநாயகன்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் !!!

SHARE

 ஜனநாயகன்’ வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய அஜித் ரசிகர்கள் !!!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படம் ’ஜனநாயகன்’. இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு பிறகு வரும் 23 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரின் கடைசி திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் மற்றும் த.வெ.க வினர் பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ’அடங்காத தல குருப்ஸ்’ அஜித் ரசிகர் மன்றம் சார்பில் 'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வித்தியாசமான வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த ரசிகர் மன்றத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.ரியாஸ் தலைமையில் நகரின் முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளன.

இந்த போஸ்டர்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் கருப்பு உடையில் ஒரே இரு சக்கர வாகனத்தில் இணைந்து வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று உள்ளது. மேலும், "ரசிகர்களின் இதயத்தில் தல, மக்கள் மனதில் தளபதி, பாதை வேறாக இருந்தாலும், உச்சம் ஒன்று தான்" என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது.

அதேபோல், ’அடங்காத தல குரூப்ஸ்’ மயிலாடுதுறை மாவட்ட தலைமை சார்பில் 'ஜனநாயகன்' வெள்ளித் திரையில் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைதளத்தின் பயன்பாடு அதிகரித்து வந்த காலம் முதல் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே போட்டிகள் மற்றும் மோதல்கள் நிலவியது. தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியல் கட்சி துவங்கி முதலமைச்சரான நிலையில், அஜித்தும் கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளார். இதனால் காலப் போக்கில் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மோதல்கள் குறைந்து வருகிறது.

இந்த சூழலில், மயிலாடுதுறையில் முதலமைச்சர் விஜய்யின் திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி இருப்பது பொதுமக்கள் மற்றும் நடிகர்களின் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: