கலெக்டரேட் வாயிலில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா : "மீடியா வந்தாத் தான் சாமானியன் கண்ணுக்குத் தெரிவானா ?" - கோவை அரசு மருத்துவமனை அலட்சியத்திற்கு எதிராகக் கொதிப்பு !!!
ரயில்வே பாஸ் கையெழுத்துக்காக 2 மாதமாய் அலைக்கழிப்பு; உணவு கூட சாப்பிடாமல் நீதி கேட்டுப் போராடிய தனலட்சுமி!
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
ரயில்வே பாஸ் வழங்க கையெழுத்திடாமல் கடந்த 2 மாதங்களாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகக் கூறி மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த தனலட்சுமி (52) என்ற மாற்றுத்திறனாளி பெண் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் இலவச பயண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து வந்து உள்ளார்.
வாழ்நாள் பாஸ் என வழங்கப்பட்ட ரயில்வே பாஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலாவதியானதாக தெரிகிறது. இதையடுத்து அதனை புதுப்பிக்க அவர் விண்ணப்பித்த நிலையில் அதற்கான ஒப்புதலை பெறுவதற்கு கோவை அரசு மருத்துவமனை மருத்துவரை அணுகுமாறு ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று கையெழுத்து வாங்க அழைந்து வருவதாகவும் இதுவரையும் கையெழுத்து போடாமல் தன்னை அலைக்கழித்து வருவதாக கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார்.
அப்போது திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் வரும் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை மோசமாக நடத்துவதாகக் கூறி கண்ணீர் கலங்கினார். மேலும் தமிழ்நாடு முதல்வர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசம் எழுப்பினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அதனிடையே காவலர்களிடம் சாலையில் அமர்ந்து ஊடகம் வந்தால் தான் சாமானிய மக்கள் கண்ணுக்கு தெரிவார்களா என ஆதங்கம் கொண்டார்.
இது குறித்து பேசிய தனலட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக கையெழுத்து வாங்குதற்காம அழைந்து வருகிறேன் என்றும் ஆனால் தன்னை விரட்டுகிறார்கள் என்றார். முதலமைச்சர் என்ன செய்கிறார், மாற்றுதிறனாளிக்கே நியாயம் கிடைக்கில்லை என்றால், ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் என்ன செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
எனது விண்ணப்பத்திற்கு கையெழுத்து வழங்க வேண்டும், முதலில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அரசு ஊழியர் என்றால் எங்களை மதிக்க கூடாதா? உணவு கூட சாப்பிடாமல் அழைந்துகொண்டிருக்கிறேன் என்றார்.

0 கருத்துகள்: