வெள்ளி, 10 ஜூலை, 2026

காவிரி பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் மீது பழிபோடுவதா? மாணிக்கம் தாகூர் காட்டம் !!!

SHARE

 காவிரி பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் மீது பழிபோடுவதா? மாணிக்கம் தாகூர் காட்டம் !!!

காவிரி பிரச்சினை, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் மீது பழிபோட கூடாது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர், அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

அந்த வகையில், சென்னை தி.நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்தை அவர் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து அங்கு இருந்த செய்தியாளர்களை மாணிக்கம் தாகூர் சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எப்போதுமே தனது கொள்கையில் மிகத் தெளிவாக இருப்பவர்கள். 'இந்தியா' கூட்டணியில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக முக்கியமான பங்கை வகித்து வருகிறது.

பா.ஜ.க வுக்கு எதிராகவும், மோடி மற்றும் அமித்ஷாவின் ஜனநாயக விரோதக் கொள்கைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் ஒரே கூட்டணி 'இந்தியா' கூட்டணி தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தோழமை நிலையில் இருக்கும் தமிழக வெற்றி கழகத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழகத்தில் மதசார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்ளோம்.

ஆணவக் கொலை பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து முடிவு எடுப்போம்.

தமிழகத்திற்குள் பா.ஜ.க மறைமுகமாகவும், முகமூடி அணிந்து கொண்டும் நுழைந்து விட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். காவிரி பிரச்சனையை பொறுத்த வரை, தமிழ்நாடு காங்கிரஸ், கர்நாடகா காங்கிரஸ் என்று பார்க்க வேண்டாம். மாநில உரிமை என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும்.

காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் மீது பழி போடுவதால் மட்டும் எந்த தீர்வும் எட்டப்படாது.

மகளிர் விடியல் பயணத்தில் 'விடியல்' என்ற பெயர் நீக்கப்பட்டது குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். அரசின் திட்டத்தை நிறுத்ததான் கூடாது. பெயர் எண்ண வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். மக்களுக்கு பாதிப்பு இல்லாம் இருந்தால் போதும்" என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

முன்னதாக, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை கொடுக்கப்படுவது விமர்சிக்கப்டுகிறதே என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலோர் ஏழை - அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பிலும் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது" என மாணிக்கம் தாகூர் கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: