புதன், 15 ஜூலை, 2026

தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் பச்சிளம் மயில் குஞ்சு பரிதாப மரணம் : கோவை ஆட்சியர் அலுவலக பரிதாபம் - காப்பாற்ற முயன்ற தாய் மயிலின் பாசப் போராட்டம் !!!

SHARE

 தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் பச்சிளம் மயில் குஞ்சு பரிதாப மரணம் : கோவை ஆட்சியர் அலுவலக பரிதாபம் - காப்பாற்ற முயன்ற தாய் மயிலின் பாசப் போராட்டம் !!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் புகுந்த தெரு நாய்கள் கூட்டம், தேசியப் பறவையான மயிலின் குட்டியை ஓட, ஓட விரட்டிக் கடித்துக் குதறிப் படுகொலை செய்து உள்ள நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம், கலெக்டரேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெருகி வரும் தெரு நாய்களின் அச்சுறுத்தலுக்குப் பச்சை இளம் மயில் குஞ்சு பலியாகி உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே, பழைய நில அளவைத் துறை பயிற்சி வளாகக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டடத்தின் பின்புறப் பகுதி பல மாதங்களாக முறையான பராமரிப்பின்றி, அடர்ந்த காடு போலப் புதர்கள் மண்டி கிடக்கிறது. 

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த தாய் மயில் ஒன்று, தனது குட்டி மயிலுடன் அந்தப் புதர் பகுதியில் இரை தேடிச் சுற்றிக் கொண்டு இருந்து உள்ளது. அப்போது, அந்தப் பகுதியில் கூட்டமாகத் திரிந்த தெரு நாய்கள், மயில் மற்றும் அதன் குட்டியைக் கண்டதும் ஆக்ரோஷமாகக் குரைத்து, அவற்றை வேட்டையாடுவதற்காகப் பாய்ந்து ஓட, ஓட விரட்டி உள்ளன.

இந்தக் கொடூரக் காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், உடனடியாக ஓடிச் சென்று நாய்கள் கூட்டத்தை விரட்ட அடித்தனர். 

மேலும், ஆபத்தான நிலையில் இருந்த குட்டி மயிலைப் பிடித்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கினர். ஆனால், அதற்கு உள்ளாகவே தெரு நாய்கள் கொடூரமாகக் கடித்ததில் மயில் குஞ்சு பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடியது.

 ஊழியர்கள், மயில் குஞ்சைக் காப்பாற்ற உடனடியாகத் தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்ய முயன்றனர். ஆனால், அவர்களின் தீவிர முயற்சி பலனின்றி அந்தப் பச்சிளம் மயில் குஞ்சு ஊழியர்களின் கைகளிலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தது.

 "ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு, நாள் மெகா அளவில் அதிகரித்து வருகிறது. 

 நூற்றுக் கணக்கான பொதுமக்கள் தினசரி வந்து செல்லும் கலெக்டரேட்டிலேயே நாய்கள் கூட்டம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனைத் தடுக்கவும், நாய்களைப் பிடித்துச் சென்று கருத்தடை செய்யவும் மாநகராட்சிக்கு பலமுறை கூறியும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் விளைவாகத் தேசியப் பறவையான மயிலின் குஞ்சு பலியாகி உள்ளது" என வேதனையுடன் தெரிவித்தனர்.

இனியும் அலட்சியம் காட்டாமல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள புதர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், அங்கு அச்சுறுத்தலாகத் திரியும் தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் செல்ல வேண்டும் என்றும் சமூக மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: