புதன், 15 ஜூலை, 2026

எம்.ஜி.ஆரிடம் இருந்த கவர்ச்சி எல்லாம் முதலமைச்சர் விஜய்யிடம் இல்லை: செல்லூர் ராஜு !!!

SHARE

 எம்.ஜி.ஆரிடம் இருந்த கவர்ச்சி எல்லாம் முதலமைச்சர் விஜய்யிடம் இல்லை: செல்லூர் ராஜு !!!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததை போன்ற கவர்ச்சியும், ஈர்ப்பும் முதலமைச்சர் விஜய்யிடம் இல்லை என முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் செல்லூர் ராஜுவின் பேச்சு அனல் பறப்பதாக இருந்தது. அவர் பேசியதாவது:

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளான உங்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் சொல்லுங்கள். நாங்கள் வருகிறோம் நிர்வாகிகளுக்கு ஒன்று என்றால், நிச்சயமாக நாங்கள் வருவோம்.

அ.தி.மு.க வை விட்டு செல்பவர்களை பற்றி நம் கட்சி என்றைக்கும் கவலைப்படாது. எனது இளமை காலத்தில் இருந்து எப்போதுமே மதுரை மக்களின் நலனை பற்றிதான் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ க்கள் சட்டமன்றத்திற்கு சென்று, என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே என்னென்னவோ பேசி வருகின்றனர்.

இளைய தலைமுறையை பாழடித்துக் கொண்டு இருக்கும் முதலமைச்சராக விஜய் இருக்கிறார். ஒரு நடிகராக நீங்கள் பேசுவது வேறு; முதலமைச்சராக சட்டமன்றத்தில் பேசுவது என்பது வேறு என முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

நாகரிகமாகத் தான் சட்டமன்றத்தில் பேச வேண்டும். முதலமைச்சர் நாற்காலியில் இதுவரை யார் யார் அமர்ந்து இருக்கிறார்கள் தெரியுமா ? ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் அமர்ந்த நாற்காலி இது.

அப்படிப்பட்ட சட்டமன்றம் தற்போது சந்தைக் கடை ஆகி விட்டது. தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களே, உங்களை பார்த்து நான் கேட்கிறேன்.

நீங்கள் என்ன யோக்கியரா ? உங்களை பார்த்து கை நீட்டி சவால் விட்டு கேட்கிறேன். ஒரு திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளத்துக்கு வரி ஏய்ப்பு செய்து, அபராதம் கட்டியது மறந்து விட்டதா ?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்; வரவேற்கிறோம். அதற்கு முன்பாக உங்கள் கூட்டத்துக்கு வந்து இறந்த 10 பேருக்கு என்ன செய்தீர்கள் ?

இனி இயற்கை பேரிடர், சாலை விபத்து ஆகியவற்றில் இறந்து போகக் கூடியவர்களுக்கும் இப்படி நீங்கள் அரசு வேலை கொடுப்பீர்களா ? மேடையில் ஓடு, ஓடு என பாட்டு பாடும் நீங்கள் தான் (முதலமைச்சர் விஜய்), அரசியலை விட்டே ஓட வேண்டும்.

பார்ப்பவர்கள் மீண்டும், மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு ஈர்ப்பு உள்ளவர்கள எம்.ஜி.ஆர்ரும், ஜெயலலிதாவும் மட்டுமே. அப்படிப்பட்ட கவர்ச்சி ஒன்றும் விஜய்க்கு கிடையாது.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தொழிற்சங்கம் ஆரம்பிப்போம் என்று யாரும் அழைத்தால், நீங்கள் செல்ல வேண்டாம். அங்கு எதுவும் கிடையாது. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு துணையாக இருப்பது என்றுமே அ.தி.மு.க தான். இவ்வாறு செல்லூர் ராஜு பேசினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: