வியாழன், 2 ஜூலை, 2026

நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பை எதிர்த்த வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு !!!

SHARE

 நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பை எதிர்த்த வழக்கை நிராகரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு !!!

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை தேர்தல் நடத்தாமல் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கச் சட்ட விதிகளின்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதன் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் 2025 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டது.

இதை அடுத்து, நிர்வாகிகள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து 2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிர்வாக காரணங்களால் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து, பொதுக்குழு தீர்மானத்தைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு ஆகியவை சங்கம் தொடர்பாக முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நிர்வாகிகள் பதவிக் காலத்தை நீட்டித்த தீர்மானத்தை எதிர்த்து உறுப்பினர் நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி, சங்க உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரியா கிளாட், நிர்வாகிகள் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து நம்பிராஜன் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க மறுத்த நீதிபதி, எஸ்.ஆர்.சேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம் நீட்டிப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துச் செய்யும் பட்சத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஓய்வுப் பெற்ற நீதிபதியை நியமித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: