வியாழன், 2 ஜூலை, 2026

ஆராய்ச்சிக்காக விடப்பட்ட கழுகு உயிரிழப்பு ; உதகை அருகே மின்சாரம் தாக்கி பலி !!!

SHARE

 ஆராய்ச்சிக்காக விடப்பட்ட கழுகு உயிரிழப்பு ; உதகை அருகே மின்சாரம் தாக்கி பலி !!!

மும்பை வன உயிரின ஆராய்ச்சி மையத்தின் சார்பாக ஆராய்ச்சிகாக ஜி.பி.எஸ் கருவியுடன் பறக்க விடபட்ட கழுகு உதகை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.

பிணந்தின்னி கழுகுகள் என்பது இயற்கையின் மிகச் சிறந்த "துப்புரவாளர்கள்" என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான பறவை இனமாகும். காடுகளிலும், மனிதர்கள் வாழும் பகுதிகளிலும் உள்ள இறந்த விலங்குகளின் உடல்களை தின்று, சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்து இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

1990-களில் இந்தியாவில் கோடிக் கணக்கில் இருந்த கழுகுகளின் எண்ணிக்கை திடீரென 99% வரை குறைந்தது. டைக்ளோஃபெனாக் எனப்படும் மருந்து போடப்பட்ட மாடுகளின் உடலை சாப்பிட்டதால், கழுகுகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததே இதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுகிறது. கால்நடைகளுக்கு வலியைக் குறைக்க இந்த மருந்து போடப்பட்டது. தற்போது இந்த மருந்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, இந்தியாவில் அழிவின் விளிம்பில் உள்ள வல்சர் எனப்படும் பிணந்தின்னி கழுகு இனத்தை பாதுகாக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக 2025 டிசம்பரில் மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் ஒரு வல்சர் இன கழுகின் முதுகில் GPS கருவி பொருத்தப்பட்டு பறக்க விடப்பட்டது.

இந்தப் பறவை, கர்நாடகாவிற்குள் நுழைந்தது. அங்கு நோய் அறிகுறிகளைக் காட்டியதால், அது பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக BNHS என்று அழைக்கப்படும் மும்பை வன உயிரின ஆராய்ச்சி மையத்தின் சார்பாக விடபட்ட இந்தக் கழுகு புதிய சூழலுக்கு பழகிக் கொள்ளாமல் முதுமலை புலிகள் காப்பக பகுதி, கல்லட்டி மற்றும் எப்பநாடு பகுதியில் குடியிருப்பு பகுதிகளேயே தொடர்ந்து சுற்றி சுற்றி வந்தது.

இந்த நிலையில், அந்த கழுகு கடந்த சில தினங்களாக எப்பநாடு பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில் கடந்த 27 ம் தேதி இரவு மின்சாரக் கம்பியில் சிக்கி உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. அதனை மீட்டு வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். கழுகு உயிரிழந்து இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிணந்தின்னி கழுகு முட்டைகளை குஞ்சு பொறிக்க வைத்து சிறிது வளர்ந்த பிறகு வனப்பகுதியில் விட்டால், அந்தக் கழுகுகள் தானாக வனப்பகுதியில் வாழ பழகி கொள்ளுமா என்பதை ஆய்வுச் செய்ய இந்த கழுகு விடப்பட்டது. தற்போது அந்த கழுகு இறந்து இருப்பதால் அந்த சோதனை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: