அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.க-வில் இணைந்தனர்!
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தங்களை த.வெ.க வில் இணைத்துக் கொண்டனர்.
2026 சட்டப் பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மே 13-ந் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இந்த அணியைச் சேர்ந்த 25 பேர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி, த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மேலும் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையை (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் ஆகிய மூவரும் த.வெ.க வில் இணைந்தனர்.
சட்டப் பேரவையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி கையிலெடுக்க, எதிர்ப்பு அணியினர் அவருடன் சமாதானமாகினர். ஆனால், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக செல்லவில்லை.
இந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் ஜூன் 16-ந் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், எடப்பாடி அணிக்கு சென்றாலும், மீண்டும் கட்சிப் பதவி கிடைக்காததால் சிலர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் வெளிப்பாடாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ஜூன் 29- ந்தேதி ராஜிநாமா செய்தார்.
சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் த.வெ.க வில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று அவர்களே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோரும் அ.தி.மு.க வில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க வினர் த.வெ.க வில் இணையும் விழா இன்று (ஜூலை 2) பிரமாண்டமாக நடைபெற்றது.
த.வெ.க பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகிய 4 பேரும், தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் த.வெ.க வில் இணைந்தனர்.
மேலும், முன்னாள் எம்எல்ஏக்களான ஈ.எம். மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம். ராம்குமார் (கும்பகோணம்), எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (திருச்சுழி), சதன் பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), சுந்தரராஜன் (சங்ககிரி), ராமச்சந்திரன் (சிவகங்கை) ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் த.வெ.க வில் இணைந்தனர்.
இதே போல் வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்), இளமை தமிழ்செல்வன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்), சேகர் (ஒரத்தநாடு செயலாளர்) மற்றும் சீனிவாசன் (திருச்சி முன்னாள் துணை மேயர்) உள்ளிட்டோரும் தங்களது ஆதரவாளர்களோடு தவெகவில் இணைந்தனர்.
த.வெ.க வில் இணைந்தவர்கள் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: