வியாழன், 2 ஜூலை, 2026

தி.மு.க அவமானப்படுத்தியது; நெஞ்சில் குத்திவிட்டது!' - இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என வைகோ பேட்டி !!!

SHARE

 தி.மு.க அவமானப்படுத்தியது; நெஞ்சில் குத்திவிட்டது!' - இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என வைகோ பேட்டி !!!

நடைபெற உள்ள இடைத் தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார். அதே நேரத்தில், விஜய் தலைமையிலான அரசியல் மாற்றத்திற்கு ம.தி.மு.க உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஜூலை 1 புதன்கிழமை தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க, ஐயுஎம்எல், ம.தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சிகள் பங்கேற்றன. இதில் முதலமைச்சர் விஜய்யுடன் வைகோ நீண்ட ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ,

 நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது என்றும், ஆனால் விஜய் தலைமையிலான அரசியல் மாற்றத்திற்கு தங்களின் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், தி.மு.க கூட்டணியில் இருந்த போது தங்கள் கட்சி தொடர்ந்து அவமதிக்கப்பட்டதாகவும், சுயமரியாதையை காக்கவே கூட்டணியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவை முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க வுடன் இணைந்து தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் உலா வந்தன. அது தொடர்பாக பேசிய வைகோ, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் குறித்து தகவல் கிடைத்ததாலேயே பொதுக்குழு முடிவின் அடிப்படையில் தான் தி.மு.க வில் இருந்து வெளியேறியதாக பகிரங்கமாகக் கூறினார்.

எங்களை முதுகில் குத்தவில்லை; நெஞ்சில் குத்திவிட்டார்கள். இருந்தாலும் எங்கள் இயக்கத்தினர் உறுதியுடன் உள்ளனர்" என்று உணர்ச்சி பூர்வமாக பேசிய வைகோ, தி.மு.க தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விஜய்க்கு அதிக ஆதரவு உள்ளது. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 35 முதல் 45 சதவீத வாக்குகளை பெறும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ஐந்தாண்டுகளை நிறைவு செய்வார்” என்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில், தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினருக்கு ரூ. 35 கோடி தருவதாக பேரம் பேசிய விவகாரம் குறித்து வைகோ-விடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அரசியல் மோசடி நடந்து உள்ளது என்றும், அதில் தி.மு.க–அ.தி.மு.க தொடர்பு குறித்து பல கேள்விகள் எழுந்து உள்ளதாகவும் விமர்சித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: