தி.மு.க வை காப்பாற்ற மு.க ஸ்டாலின் குடும்பம் கட்சியை விட்டு விலக வேண்டும் - அமைச்சர் நிர்மல் குமார் !!!
தி.மு.க வை காப்பாற்ற அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் குடும்பமும், அ.தி.மு.க வை காப்பாற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியை விட்டு விலக வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்து உள்ளார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழக வளாகத்தில் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்கு சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இன்று சட்டப் பள்ளி மாணவர் விடுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. இந்த விடுதியில் 240 மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் மாணவிகளுக்கான விடுதியும் சென்னையில் தொடங்கப்பட உள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “சட்டக் கல்லூரிகளை நேர்மையான முறையில் செயல்படுத்துவதே இந்த அரசின் நோக்கம். ஒருசில தனியார் சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டிய இடங்களை டொனேஷன் பெற்று முறைகேடாக விற்கின்றனர். இதுபோன்று செயல்பட்டு வந்த தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது” என்றார்.
குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய நிர்மல் குமார், “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் த.வெ.க கட்சியில் இணைகின்றனர். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் எந்தவித பாகுபாடுமின்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். தவறு செய்தவர்கள் மீது எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது.
த.வெ.க எம்.எல்.ஏவிடம் 30 கோடி, 40 கோடி என பேரம் பேசியது தற்போது அம்பலமாகி உள்ளது. ஆதாரத்தின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வேறு வழியின்றி தான் தி.மு.க வினர் ஆளுநரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர். கடந்த ஐந்தாண்டு தி.மு.க ஆட்சியில் நடந்தவைக்கு இந்த தேர்தலில் மக்களின் கொடுத்து தீர்ப்பு தான் இது.
30 நாட்களில் த.வெ.க அரசு கவிழும் என எந்த தைரியத்தில் திமுக தலைவர் சொல்கிறார்? கோடிக்கணக்கில் பணம் வைத்து இருந்தால் யாரை வேண்டுமானாலும் வாங்கி விடலாம் என்ற தைரியத்தில் தானே ? அவரால் 30 நாட்களில் எதுவும் சாதிக்க முடியவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சராக இருந்த போதும் அவர் எதையும் சாதிக்கவில்லை.
கூட்டணிகளின் ஆதரவோடு நாங்கள் 120 பேர் சட்டமன்றத்தில் உள்ளோம். ஆனால் செந்தில் பாலாஜியை வைத்துக் கொண்டு தி.மு.க தலைவர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் இந்த அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். ஆனாலும் நாங்கள் தொடர்ந்து மக்கள் பணியை செய்து கொண்டே இருப்போம். அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். மக்களுக்கு தான் பயப்படுவோம்” என்றார்.
ஒரு நடிகர் தமிழக முதலமைச்சராக இருக்க என்ன அருகதை இருக்கிறது? என்று விமர்சிக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பற்றி 50 ஆண்டுகளாக திமுகவினர் எப்படி பேசினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். இப்போது தி.மு.க எழுதிக் கொடுத்ததை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். அவருக்கு முதலமைச்சரை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
தி.மு.க வை காப்பாற்ற அக்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் குடும்பமும், அ.தி.மு.க வை காப்பாற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கட்சியை விட்டு விலக வேண்டும். அப்போது தான் கட்சிகளை ஓரளவு காப்பாற்ற முடியும்” என்று தெரிவித்தார்.

0 கருத்துகள்: