மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 'தூய்மைப் பருவம்' விழா; 1000 மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!
தற்போதைய உலகளாவிய சூழலில் பல்வேறு மாசுகளின் காரணமாக அதிகளவில் கார்பன் வாயு வெளியேற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத புதிய கண்டுபிடிப்புகள் தற்போதைய சூழலில் மிகவும் அவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் 'தூய்மைப் பருவம்' (Swachhata Pakhwada) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சரும் பிரபல நடிகருமான சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தூய்மை பாரத உறுதிமொழியினை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' (Ek Ped Maa Ke Naam) இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்லூரி மைதானத்தில் அமைச்சர் சுரேஷ் கோபி தனது தாயின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். மேலும், கல்லூரிப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் மேலும் பேசுகையில், "இந்த தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நம்முடைய வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக மேற்கொள்ளப்படுபவை ஆகும். மாணவர்கள் தூய்மைப் பணிகளையும் விழிப்புணர்வையும் இன்றைய ஒரு நாளுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளக் கூடாது. இதனை ஒரு கடமையாகக் கொண்டு, ஆண்டு முழுவதும் தங்களது அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்: