ஞாயிறு, 26 ஜூலை, 2026

உண்டியலைத் தூக்கிய பூசாரி உள்ளிட்ட 4 பேர் கைது ; கண்டுகொள்ளாத உதவி ஆணையர் உள்பட 8 பேர் ‘கூண்டோடு’ சஸ்பெண்ட் – அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி !!!

SHARE

 உண்டியலைத் தூக்கிய பூசாரி உள்ளிட்ட 4 பேர் கைது ; கண்டுகொள்ளாத உதவி ஆணையர் உள்பட 8 பேர் ‘கூண்டோடு’ சஸ்பெண்ட் – அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி !!!

கோவை கோனியம்மன் கோயிலில் அரங்கேறிய திருட்டு: உக்கடம் போலீஸாரின் நடவடிக்கை – சி.சி.டி.வி யில் சிக்கிய கையாடல் !!!

​ கோவை மாநகரின் அதிபிரசித்தி பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் திட்டமிட்டு உண்டியலைத் திருடிய பூசாரி உள்ளிட்ட 4 பேரைக் காவல் துறையினர் கைது செய்து உள்ள நிலையில், கையாடலைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்த உதவி ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட 8 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

​கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயிலில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது தற்காலிக உண்டியல் ஒன்றைத் திட்டமிட்டுச் சில ஊழியர்கள் திருடிச் சென்றதும், காணிக்கைப் பணத்தைக் கையாடல் செய்ததும் சி.சி.டி.வி ஆய்வில் அம்பலமானது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த உக்கடம் காவல் துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு கோயிலில் பணியாற்றி வந்த சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பணியாளர் பிரதீப் குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

 இதன் இடையே, இவ்வளவு பெரிய திருட்டுச் சம்பவம் நடந்தும் அதைக் கண்டுபிடிக்காமலும் தடுத்து நிறுத்தாமலும் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுத்து உள்ளது.

​அதன்படி, திருட்டில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் மற்றும் அலட்சியமாக இருந்த சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார், செயல் அலுவலர் குமார், உதவி ஆணையர் உஷா நந்தினி ஆகிய 8 பேரையும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

 இவர்கள் மீது காவல் துறை ரீதியான குற்றவியல் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் பக்திச் பரவசத்துடன் செலுத்திய காணிக்கையைத் திருடிய விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: