ரோட் ரேஜ்’ அராஜகம் ; கோவையில் நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள் - ஊழியர்கள் மோதலால் பயணிகள் அச்சம், ஸ்தம்பித்த போக்குவரத்து !!!
லாப வெறியால் பயணிகளின் உயிருடன் விளையாடும் ஓட்டுநர்கள் – கோவையில் பரபரப்பு !!!
கோவையில் தொழில் போட்டி காரணமாக இரண்டு தனியார் பேருந்துகளை நடுரோட்டிலேயே ஒன்றோடொன்று முட்டி மோதி நிறுத்தி, அதன் ஊழியர்கள் பயங்கர தகராறில் ஈடுபட்ட சம்பவம், பேருந்துப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, காந்திபுரத்தில் இருந்து புலியகுளம், சவுரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் இயங்கும் சில தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அதிக லாபம் ஈட்டும் நோக்கோடும், சக பேருந்துகளின் பயணிகளைத் தாங்களே அள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள சரியான நேரத்தைப் பின்பற்றாமல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேருந்துகளைக் காலம் தாழ்த்தி இயக்குவது அல்லது நேரத்திற்கு முன்னதாகவே அதிவேகமாக இயக்கி ‘ரேஸ்’ போடுவது எனப் பயணிகளின் உயிருடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதன் உச்சக்கட்டமாக, உப்பிலிபாளையம் மற்றும் க.க.சாவடி வழியாக இயங்கக் கூடிய ‘கோகுலம்’ என்ற தனியார் பேருந்தும், பேரூர் மற்றும் ராமநாதபுரம் வழியாக இயங்கக் கூடிய ‘ஸ்ரீதேவி’ என்ற தனியார் பேருந்தும் புலியகுளம் - சவுரிப்பாளையம் சாலையில் அடுத்தடுத்து வந்து உள்ளன. அப்போது டைமிங் விவகாரத்தில் இரு பேருந்துகளின் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. ஆத்திரம் அடைந்த ஓட்டுநர்கள், பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த அந்த நடுரோட்டிலேயே இரண்டு பேருந்துகளையும் ஒன்றோடொன்று மோதும் வகையில் ஆபத்தாக முட்டி நிறுத்தி உள்ளனர்.
வண்டிகள் மோதிக் கொண்ட சத்தத்தில் பேருந்துக்குள் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் விபத்து ஏற்பட்டுவிட்டதோ ? என்ற மரண பயத்தில் அலறி அடித்துச் கூச்சலிட்டனர்.
பேருந்துகளை அப்படியே நிறுத்தி விட்டு, இரு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் சாலையில் இறங்கி ஒருவரையொருவர் ஆபாசமாகத் திட்டி, கைகலப்பில் ஈடுபடும் நோக்கில் மோதிக் கொண்டனர்.
புலியகுளம் - சவுரிப்பாளையம் சாலையில் இரண்டு பேருந்துகள் குறுக்காக மோதி நின்றதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்கள் போவதற்கு வழியின்றி கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று கடும் அவதிக்கு உள்ளாயினர்.
தனியார் பேருந்து ஊழியர்களின் இந்தத் தொடர் ‘ரோட் ரேஜ்’ (Road Rage) அராஜகத்தால் எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்பட்டுப் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே, வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) மற்றும் காவல் துறையினர் உடனடியாக இந்தக் குறிப்பிட்ட ‘கோகுலம்’ மற்றும் ‘ஸ்ரீதேவி’ பேருந்து ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இவர்களின் உரிமத்தை ரத்து செய்து, பேருந்தின் வழித்தட உரிமத்தை முடக்க கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்களின் பேருந்து பயணம் பாதுகாப்பாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: