ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

கோவையில் தனியார் கல்லூரியின் விடுதி சமையலறை பூட்டி சீல் ; 12 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை !!!

SHARE

 கோவையில் தனியார் கல்லூரியின் விடுதி சமையலறை பூட்டி சீல் ; 12 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை !!!

​கோவை, மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விடுதி சமையலறை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும், 12 தனியார் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையேற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி அனுராதா தலைமையிலான குழுவினர் ஆகஸ்ட் 10 முதல் 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள 13 தனியார் கல்லூரிகளின் விடுதிகள் மற்றும் உணவகங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு செய்யப்பட்ட 13 கல்லூரிகளிலுமே பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சமையலறைகள் முறையான பராமரிப்புப் பதிவேடுகள் இன்றி இயங்கி வந்தன. உணவைச் சமைப்பவர்கள் மற்றும் பரிமாறுபவர்களிடம் மருத்துவ உடற்தகுதிச் சான்றிதழ்கள் இல்லை. உணவு கையாளுபவர்கள் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெறவில்லை.

 பூச்சிக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், சரியான உணவு சேமிப்பு முறைகள் மற்றும் கழிவு அகற்றுதல் ஆகியவற்றில் கடுமையான குறைபாடுகள் இருந்தது அம்பலமானது.

ஆய்வின் போது, ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விடுதி சமையலறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 32-இன் கீழ் அந்த விடுதி சமையலறையின் செயல்பாடுகளை 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 சமையலறை மூடப்பட்டதை அடுத்து, அந்தக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது. ​மேலும், ஆய்வு செய்யப்பட்ட அனைத்து 13 கல்லூரிகளுக்கும் மேம்பாட்டு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 

மாவட்டம் முழுவதிலும் உள்ள பிற கல்லூரிகளிலும் இந்த அதிரடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: