இன்ஸ்டாகிராம் பழக்கம்: வடமாநில துணி வியாபாரியைக் கடத்தி ரூ.26½ லட்சம் பறித்த வழக்கில் அதிரடி திருப்பம்; திண்டுக்கல், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் கும்பல் கைது!
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ஆராம்பாக், மதாப்கூர் கிராமத்தைச் சேர்ந்த யாதவ் ராணா என்பவரது மகன் தேப்ஜித் ராணா (வயது 25). இவர் திருப்பூரில் இருந்து ஆடைகளை மொத்தமாக வாங்கி வடமாநிலங்களில் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராம்' மூலம், திருப்பூரில் 'ஸ்ரீ குமார் கார்மெண்ட்ஸ்' நடத்தி வருவதாகக் கூறிய ஆனந்தகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூலை 5-ந் தேதி தேப்ஜித் ராணாவை கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஹோட்டல் விவாந்தாவுக்கு வரவழைத்த ஆனந்தகுமாரும், அவரது நண்பர் செந்தில்குமார் பெரியசாமியும் அவரிடம் ரூ.1 கோடி கடன் கேட்டு உள்ளனர். ஆனால் அவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தர தேப்ஜித் ராணா மறுத்து விட்டார்.
இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி தேப்ஜித் ராணா தனது நண்பர்களான சித்தார்த், ஆதர்ஷ்குமார் ஆகியோருடன் வியாபார விஷயமாக கோவைக்கு வந்து, சித்ரா அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார்.
மறுநாள் 17-ந் தேதி காலை 8.30 மணி அளவில் 2 கார்களில் அங்கு வந்த ஆனந்தகுமார், செந்தில்குமார் பெரியசாமி மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் கொண்ட கும்பல், ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்தது. அவர்கள் 3 பேரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, கடுமையாகத் தாக்கி, காரில் பலவந்தமாக ஏற்றி பல்லடத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்குக் கடத்திச் சென்றனர்.
அங்கு வைத்து அவர்களைச் சிறைபிடித்து மிரட்டி, கூகுள் பே மற்றும் வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ.26 லட்சத்து 54 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டனர். மேலும் தேப்ஜித் ராணா அணிந்து இருந்த 1 பவுன் தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். பின்னர் 18-ந் தேதி இரவு அவர்கள் 3 பேரையும் மீண்டும் கோவை ஹோட்டல் அருகே இறக்கி விட்டு அந்தக் கும்பல் தப்பியோடியது.
காயமடைந்த தேப்ஜித் ராணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் கடத்தல், கூட்டுக் கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், இந்த துணிகரக் கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் முருகா பவனம், ஓ.சி.பி. நகரைச் சேர்ந்த முருகன் மகன் வினோத் (37). திண்டுக்கல் கடுப்பட்டி, திருமலைக்கேணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத்குமார் (39). திருச்சி புதூர், அருணா நகர் காவேரி கார்டனைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சண்முகராஜ் (44). மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, பரசலூர் என்.பி.எஸ். ஸ்டோர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்குமார் (45) ஆகிய முக்கிய குற்றவாளிகள் 4 பேரை பீளமேடு தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து வடமாநில வியாபாரியிடம் பறிக்கப்பட்ட ரூ.26 லட்சத்து 54 ஆயிரம் ரொக்கப்பணம் முழுமையாகவும், 8 கிராம் தங்க மோதிரம் மற்றும் தலா ரூ.1 லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்ட 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் பிடிபட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். துரிதமாகச் செயல்பட்டு 4 குற்றவாளிகளைக் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை முழுமையாக மீட்ட பீளமேடு தனிப்படை போலீசாரை மாநகர காவல் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

0 கருத்துகள்: