ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தொழிலதிபரிடம் 900 பவுன் நகைகளை மோசடி செய்த மருமகன் அதிரடி கைது!

SHARE

 தொழிலதிபரிடம் 900 பவுன் நகைகளை மோசடி செய்த மருமகன் அதிரடி கைது!

அரசு மருத்துவர் பணியை ராஜினாமா செய்து விட்டுப் பங்களாவில் கைவரிசை; மாமியாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர்!

கோவை, கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் சுமார் 900 பவுன் தங்க நகைகளைத் திட்டமிட்டு மோசடி செய்த மருமகனை மாநகரக் குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர்.

கோவை, கணபதி மாநகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவர் தனது மகள் கௌசல்யாவை கடந்த 2024-ஆம் ஆண்டு பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து உள்ளார். 

விக்னேஷ் மருத்துவர் என்பதால், தொழிலதிபர் சண்முக பாண்டியன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்குக் கவுண்டம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் (PHC) அரசுப் பணியும் வாங்கிக் கொடுத்து உள்ளார். ஆனால், விக்னேஷ் அந்த வேலையை திடீரென ராஜினாமா செய்து விட்டு எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்து உள்ளார்.

​இதன் இடையே, திருமணத்திற்குப் பிறகு விக்னேஷின் தந்தை முருகேசன், தாய் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோர் காளப்பட்டியில் உள்ள சண்முக பாண்டியனுக்குச் சொந்தமான பிரம்மாண்ட பங்களாவிற்குச் சென்று குடியேறினர். 

தொழிலதிபர் சண்முக பாண்டியன் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், தனது வீட்டில் இருந்த லாக்கர் மற்றும் பீரோ சாவிகளை மருமகன் விக்னேஷிடம் கொடுத்து நகைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி இருந்தார். அதில் சுமார் 1000 பவுன் நகைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுச் சண்டை வெடித்ததால், விக்னேஷும் அவரது குடும்பத்தினரும் அந்தப் பங்களாவை விட்டு வெளியேறி வேறு வீட்டிற்குச் சென்றனர். 

இதன் பின்னர் சண்முக பாண்டியன் பீரோ சாவியைத் திரும்பக் கேட்ட போது விக்னேஷ் கொடுக்க மறுத்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சண்முக பாண்டியன் லாக்கரை உடைத்துப் பார்த்த போது, அதில் இருந்த 1000 பவுன் நகைகளும் காணாமல் போயிருந்தது கண்டு  அதிர்ச்சி அடைந்தார்.

​இதுகுறித்து புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த சூழலில், விக்னேஷின் தந்தை முருகேசன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நகைகளைத் திரும்பக் கேட்ட போது, விக்னேஷ் மற்றும் அவரது தாயார், சகோதரி ஆகியோர் வெறும் 100 பவுன் நகைகளை மட்டுமே திருப்பிக் கொடுத்து உள்ளனர். மீதமுள்ள 900 பவுன் நகைகளைத் தர மறுத்து சண்முக பாண்டியனுக்குக் கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சண்முக பாண்டியன் இதுகுறித்து கோவை மாநகரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு மருமகன் விக்னேஷை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த நகை மோசடியில் தொடர்புடைய விக்னேஷின் தாயார் வாசுகி மற்றும் சகோதரி ஜீவிதாவிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவையில் 900 பவுன் நகையை மருமகனே மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: