"3 ரூபாய் சில்லறையால் வந்த வினை" - கோவை ரயில் நிலையம் அருகே மினி பேருந்து மீது போதை ஆசாமி கல்வீச்சு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தாததால் ஆத்திரம்!
கோவை, ரயில் நிலையம் அருகே 3 ரூபாய் சில்லறை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், அதே பேருந்தில் பயணித்த மதுபோதை ஆசாமி ஒருவர் மினி பேருந்தின் கண்ணாடியைக் கல்லால் அடித்து நொறுக்கி விட்டுத் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, காந்திபுரம் பகுதியில் இருந்து நேற்றிரவு உக்கடம் நோக்கித் தனியார் மினி பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. அப்போது காந்திபுரத்தில் ஏறிய மதுபோதையில் இருந்த பயணி ஒருவர், கோவை ரயில் நிலையத்திற்குத் பயணிக்க ரூ.10 கொடுத்து உள்ளார்.
அதற்கான ரூ.7 பயணக் கட்டணம் போக மீதி ரூ.3 சில்லறையை நடத்துனர் உடனடியாக அவரிடம் திருப்பிக் கொடுத்து உள்ளார்.
பேருந்து ரயில் நிலையம் அருகே வந்த போது, அந்த போதை பயணி "எனக்கு ரூ.3 சில்லறை இன்னும் தரவில்லை" எனக் கூறி நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். நடத்துனர் ஏற்கனவே சில்லறையைக் கொடுத்து விட்டதாகக் கூறியும் கேட்காத அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பேருந்தை நிறுத்தித் தன்னை இறக்கி விடுமாறு கூறி உள்ளார்.
ஆனால், "அங்குப் பேருந்தை நிறுத்த முடியாது, ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த முடியும்" என நடத்துனர் கூறியதால் ஆத்திரம் அடைந்தார்.
ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் கீழே இறங்கிய அந்த நபர், "எனக்கு 3 ரூபாய் சில்லறை தராவிட்டால் பேருந்தை நகர்த்த விடமாட்டேன்" என மறித்து உள்ளார்.
ஓட்டுநரும் நடத்துனரும் பேருந்தை நகர்த்த முற்பட்ட போது, திடீரெனச் சாலையோரம் இருந்த பெரிய கல்லை எடுத்து மினி பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியில் வீசி நொறுக்கி விட்டு அங்கு இருந்து தப்பியோடினார்.
நடத்துனர் அவரைப் பிடிக்க முயன்றும் அவர் தப்பித்து விட்டார். இந்தச் சம்பவத்தால் நடுரோட்டில் பேருந்து நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில், பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போதை ஆசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: