வியாழன், 13 ஆகஸ்ட், 2026

மர்ம நபர்கள் வைத்த விஷ உணவு... ஒரே இரவில் 5 நாய்கள் கொத்துக், கொத்தாகப் பரிதாபச் பலி : சொந்தக் குழந்தைகள் போல் பராமரித்த பெண்கள் கண்ணீர் மல்கக் பேட்டி!

SHARE

மர்ம நபர்கள் வைத்த விஷ உணவு... ஒரே இரவில் 5 நாய்கள் கொத்துக், கொத்தாகப் பரிதாபச் பலி : சொந்தக் குழந்தைகள் போல் பராமரித்த பெண்கள் கண்ணீர் மல்கக் பேட்டி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நாய்களுக்கு மர்ம நபர்கள் விஷ உணவு வைத்ததில், ஒரே இரவில் 5-க்கும் மேற்பட்ட நாய்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் அமைந்து உள்ள வி.என்.டி நகரில் (VND Nagar) 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலான பெண்கள், அப்பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்ற தெரு நாய்கள் மற்றும் குட்டி நாய்களை மிகுந்த அன்போடு அரவணைத்து, நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் வழங்கிப் பராமரித்து வந்து உள்ளனர்.

​மேலும், அந்தப் பெண்மணிகள் தங்கள் சொந்தச் செலவில் தனியார் விலங்கு மருத்துவமனைக்குச் சென்று, அப்பகுதியில் உள்ள பெண் நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்து பாதுகாத்து வந்து உள்ளனர். இந்த நாய்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் மிகுந்த பாதுகாப்பாக இருந்ததாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உலா வந்த நாய்களுக்கு மர்ம நபர்கள் சிலர் உணவில் கொடூரமான விஷத்தைக் கலந்து வைத்து உள்ளனர். அதனைச் சாப்பிட்ட நாய்கள் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளி, துடிதுடித்துக் கொத்துக் கொத்தாகச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

​ காலை நாய்கள் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி பெண்கள், தங்கள் சொந்த வீட்டிலேயே ஒரு சோக சம்பவம் நடந்தது போல் கதறித் துடித்தனர். பின்னர் கண்ணீர் மல்க, ஜேசிபி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் உயிரிழந்த 5 நாய்களின் உடல்களையும் முறைப்படி அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்கப் பேட்டியளிக்கையில், "தெருக்களில் திரியும் நாய்களை யாரும் சரியாகப் பராமரிக்காததால், அவை உணவைத் தேடிப் பல்வேறு இடங்களுக்குச் சென்று இது போன்ற கொடூரமான அசம்பாவிதங்களில் மாட்டிக் கொள்கின்றன. எனவே, அரசு தலையிட்டு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு பகுதியிலும் நாய்கள் இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்களை (Animal Birth Control Centers) அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

​நாய்களுக்கு விஷம் வைத்துப் படுகொலை செய்த கொடூர மனம்படைத்த மர்ம நபர்கள் மீது காவல் துறை மற்றும் வனவிலங்கு நல ஆர்வலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: