வால்பாறையில் காரில் ஆபத்தான முறையில் பயணம்: 5 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலிசார் துரித நடவடிக்கை - சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டுச் சென்றதால் நடவடிக்கை !!!
கோவை மாவட்டம் வால்பாறையில் காரின் ஜன்னலில் ஆபத்தான முறையில் அமர்ந்து கூச்சலிட்டவாறு பயணித்த 5 இளைஞர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்து வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தலமான வால்பாறைக்குத் தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விடச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அப்போது சுற்றுலா வந்த 5 இளைஞர்கள் கொண்ட கும்பல், வால்பாறை மலையேற்றப் பாதையில் சென்ற காரின் ஜன்னல் கதவுகளில் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டும், உரக்கக் கூச்சலிட்டவாறும் பயணம் செய்து உள்ளனர். பிற வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் சென்றது குறித்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வால்பாறை போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ரொட்டிக்கடைப் பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்த போலீஸார், அதில் ஆபத்தான முறையில் பயணித்த 5 இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலாத் தலங்களில் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்து விதிகளை மீறியும் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்து உள்ளனர்.

0 கருத்துகள்: