"நிறுத்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ்" ; அசாமில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவின் நெகிழ்ச்சியான வீடியோ வைரல்!
வனத்துறை & ரயில்வேயின் சாதுரியமான செயல்பாடு: மிகப்பெரிய ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட காட்டு யானைகள்!
அசாம் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானைகளின் கூட்டத்தை, அசாம் வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் மின்னல் வேக நடவடிக்கையால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திப் பாதுகாத்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
அசாம் மாநிலம், நாகோன் (Nagaon) பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியைக் கடப்பதற்காகக் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று நள்ளிரவில் திரண்டு வந்தது. அதே நேரத்தில், அந்தத் தண்டவாளத்தில் அதிவேகத்தில் 'ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' ரயில் வந்து கொண்டு இருந்தது.
யானைகள் தண்டவாளத்திற்கு அருகே வருவதை முன்கூட்டியே கவனித்த அசாம் வனத்துறை ஊழியர்கள், தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினரின் அவசரத் தகவலைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டுச் சம்பந்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ-பைலட்டை தொடர்பு கொண்டு எச்சரித்தனர்.
சமயயோசிதமாகச் செயல்பட்ட லோகோ-பைலட், உடனடியாக ரயிலின் வேகத்தைக் குறைத்து ரயிலை நிறுத்தினார்.
இதனால் யானைக் கூட்டம் எவ்வித பாதிப்பும் இன்றி அமைதியாகத் தண்டவாளத்தைக் கடந்து வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகச் சென்றது.
அசாம் வனத்துறை மற்றும் இந்திய ரயில்வேயின் இந்தச் சிறப்பான ஒருங்கிணைப்பைப் பாராட்டி, சென்னைத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) ஆணையரும், முன்னாள் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாகு (IAS) தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டு உள்ளார்.
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரமாதம்! இன்று நாகோனில் ரயில் தண்டவாளத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதவிருந்த விலைமதிப்பற்ற யானைகளின் உயிர்களை, அசாம் வனத்துறை மற்றும் ரயில்வேயின் விரைவான நடவடிக்கையும் ஒருங்கிணைப்பும் காப்பாற்றியது. வனத்துறை ஊழியர்கள் ரயில்வேக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, ரயில்வே கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்பட்ட லோகோ-பைலட், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். இதனால், அந்தப் பெரிய யானைக் கூட்டம் பாதுகாப்பாகக் கடந்து சென்றது!"
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), IUCN இந்தியா, WWF-இந்தியா மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) உள்ளிட்ட அமைப்புகளைக் குறிப்பிட்டு அவர் பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வனத்துறை மற்றும் லோகோ பைலட்டின் விரைவான செயல்பாட்டிற்குப் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

0 கருத்துகள்: