"ஏன் சத்தம் போடுற?" எனக் கேட்ட டிரைவர் அடித்துக் கொலை ; கோவையில் மனநல பாதிப்படைந்த நபரால் கோரச் சம்பவம்!
வீட்டிற்குத் திரும்பிய போது தாக்குதல் - போலீஸ் தீவிர விசாரணை!
கோவை, சூலூர் அருகே உள்ள செல்லக்கரச்சல் பகுதியில், "ஏன் சத்தம் போடுகிறாய்?" எனக் கேட்ட சுமை ஊர்தி ஓட்டுநரை, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், செல்லக்கரச்சல் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.
இன்று (ஆகஸ்ட் 19) மாலை சுமார் 4.00 மணி அளவில், செந்தில்குமார் செல்லக்கரச்சலில் உள்ள கோல்டன் பேக்கரியில் தனது நண்பர்களுடன் டீ குடித்து விட்டு, சந்தோஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி உள்ளார்.
வீட்டின் முன் இறங்கிய செந்தில்குமார், தனது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் கண்ணன் (35) என்பவர் சத்தமிட்டுக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளார். கண்ணன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
அப்போது செந்தில்குமார், "ஏன் சத்தம் போடுகிறாய்?" எனக் கண்ணனிடம் கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன், கட்டையால் செந்தில்குமாரின் இடது பக்கக் காதிற்குப் பின்னால் பலமாக அடித்து உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் அளித்து வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செந்தில்குமாரைச் பரிசோதித்துப் பார்த்த போது, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் குறித்துக் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: