கோவையில் கருஞ் சிறுத்தை நடமாட்டம்; பாறைகள் இடையே தாவி குதிக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல் !!!
கோவை, மருதமலை அருகே உள்ள லெப்ரஸ் காலனி பகுதியில் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், தற்போது மருதமலை லெப்ரஸ் காலனி பகுதியில் உள்ள மலைப் பாறைகளுக்கு இடையே அரிய வகையான 'கருஞ்சிறுத்தை' ஒன்று சர்வ சாதாரணமாகத் தாவி குதித்து கீழே இறங்கி வரும் காட்சிகள் அங்கு இருந்த ஒருவரின் செல்போனில் பதிவு செய்து உள்ளார்.
பாறைகளில் இருந்து கீழே இறங்கும் இந்தக் கருஞ்சிறுத்தை வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.
குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளதால், லெப்ரஸ் காலனி மற்றும் மருதமலை பகுதி மக்கள் கடும் பீதியில் உறைந்து உள்ளனர்.
மேலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சிறு குழந்தைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: