"மிஸாத் நபி ஊர்வலத்தில் நெகிழ்ச்சி" ; அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு இனிப்பு, குளிர்பானங்கள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி!
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் 'மிஸாத் நபி' திருநாளை முன்னிட்டு, கோவையில் ஊர்வலமாக வந்த அரபிக் பாடசாலை குழந்தைகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இனிப்புகள் மற்றும் பழரசங்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
நபிகள் நாயகத்தின் நற்போதனைகளையும் தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மிஸாத் நபி திருநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் வர்ணக் கொடிகளாலும், வண்ணமயமான மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளன.
இதன் ஒருபகுதியாக இன்று காலை, கோவை, மைல்கல், சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த அரபிக் பாடசாலையில் பயிலும் இஸ்லாமிய குழந்தைகள் நபிகள் நாயகத்தின் புகழைப் போற்றும் வகையில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
நீண்ட தூரம் நடந்து வந்த குழந்தைகளின் களைப்பைப் போக்கும் வகையிலும், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், சுகுணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வருகை தந்தார்.
ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் குளிர்பானங்கள், பழரசங்கள், பிஸ்கட், இனிப்புகள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.
அவருடன் அ.தி.மு.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு இஸ்லாமிய பெருமக்களுக்குத் தங்களது மனமார்ந்த மிஸாத் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

0 கருத்துகள்: