இன்ஸ்டாகிராம் காதலுக்கு தாய்-மகள் கடும் எதிர்ப்பு... இருவரையும் வெட்டிக் கொன்ற காதலன்: ரத்த வெள்ளத்தில் தாய், மகள் பலி – கொலையாளியை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
திண்டுக்கல்லைச் சேர்ந்த அக்ஷய் கைது; திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் நேரில் ஆய்வு செய்து அதிரடி விசாரணை!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதல் மற்றும் ரகசியத் திருமணத்திற்குத் தாய் மற்றும் மகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த காதலன் இருவரையும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் 'பகீர்' பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் தனது மனைவி தனலட்சுமி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்துத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மகள் பூவரசியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பழனிச்சாமியும் தனலட்சுமியும் பனியன் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம் போல் பழனிச்சாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனலட்சுமியும் பூவரசியும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான அரிவாளால் தாய் தனலட்சுமி மற்றும் மகள் பூவரசி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். அதேவேளையில், கொலையை முடித்து விட்டுத் தப்பி ஓட முயன்ற கொலையாளியை அப்பகுதி பொதுமக்கள் சுற்றிய வளைத்துப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் பல்லடம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
5 ஆண்டு இன்ஸ்டாகிராம் காதல் - 'பகீர்' கொலையின் பின்னணி:
பிடிபட்ட நபரிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் என்பது தெரியவந்தது. பூவரசியும் அக்ஷயும் கடந்த 5 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிக் காதலித்து வந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பூவரசி தனது தாய் வீட்டிலேயே தங்கி வேலைக்குச் சென்று வந்து உள்ளார்.
இவர்களது இன்ஸ்டாகிராம் காதல் மற்றும் ரகசியத் திருமணம் குறித்துத் தாய் தனலட்சுமிக்குத் தெரியவரவே, அவர் அக்ஷயுடன் தொடர்பை துண்டிக்குமாறு மகளைக் கடுமையாகக் கண்டித்து உள்ளார். இதனால் பூவரசி, அக்ஷய்யின் போன் அழைப்புகளைத் தவிர்த்து வந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அக்ஷய், நேற்று காலை அரிவாளுடன் வீட்டிற்குள் புகுந்து தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது அம்பலமானது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளைப் பறிமுதல் செய்த பல்லடம் போலீஸார், கைதான அக்ஷய்யை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் தாய் மற்றும் மகளைக் காதலனே அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பல்லடம் பகுதி முழுவதும் பெரும் உறைச்சலையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: