முடீஸ் துண்டுச் சோலையில் நிம்மதியாக ஓய்வெடுத்த யானை: சமூக வலைதளங்களில் வைரலாகும் அழகிய காட்சி!
கோவை மாவட்டம், வால்பாறையில் காட்டு யானை ஒன்று எவ்வித அச்சமுமின்றி ஹாயாகத் தரையில் படுத்து ஓய்வெடுத்து விட்டு, பின்னர் நிம்மதியாக எழுந்து சென்ற அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து உள்ளதுடன் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அதனைச் சுற்றி உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள முடீஸ் பகுதிக்கு உட்பட்ட துண்டுச் சோலை வனப்பகுதியில் ஒற்றைக் கொம்பன் யானை ஒன்று உலா வந்து உள்ளது.
அப்போது அப்பகுதிக்கு வந்த அந்த யானை, திடீரெனப் புல்வெளியில் எவ்விதப் பதற்றமுமின்றி ஹாயாகச் சாய்ந்து படுத்து சிறிது நேரம் நிம்மதியாக ஓய்வெடுத்து உள்ளது. வழக்கமாகக் காட்டு யானைகள் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டால் ஆத்திரம் அடைவதோ அல்லது வேகமாக நகர்ந்து செல்வதோ வழக்கமாக இருக்கும்.
ஆனால், இந்தச் கொம்பன் யானை, "நான் தனியா இருந்தாலும் ஹாயாக ரெஸ்ட் எடுத்துட்டுத் தான் போவேன்" என்ற பாணியில், நிம்மதியாக உறங்கி ஓய்வெடுத்து விட்டுப் பின்னர் மெதுவாக எழுந்து அங்கு இருந்து காட்டுக்குள் சென்று உள்ளது.
யானை ஒன்று இவ்வளவு அமைதியாகத் தரையில் படுத்து ஓய்வெடுக்கும் இந்தக் அரிய காட்சியை அப்பகுதிக்கு வந்து இருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவிட்டு வியப்புடன் ரசித்தனர்.
தற்போது இந்த வனவிலங்கு ஓய்வெடுக்கும் அழகிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயனாளர்களின் லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: