ஜன்னல் இடுக்கில் இருந்து தவறி விழுந்த மயில் குஞ்சு - பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் !!!
தாய்ப் பறவையுடன் சேர்ந்த மயில் குஞ்சு : பொதுமக்கள் அருகில் செல்ல வேண்டாம் எனத் தீயணைப்புத் துறை வேண்டுகோள் !!!
கோவை BSNL அலுவலகக் கட்டிடத்தின் ஜன்னல் ஸ்லாப்பில் இருந்து தவறி விழுந்த மயில் குஞ்சைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சாதுர்யமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டுத் தாய்ப் பறவையுடன் சேர்த்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல் (BSNL) முதன்மை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகக் கட்டிடத்தின் வெளிப்புறம் உள்ள ஜன்னலின் மேல் இடுக்கில், பெண் மயில் ஒன்று 4 குஞ்சுகளை ஈன்று பாதுகாப்பாகப் பராமரித்து வருகிறது.
இந்நிலையில், இன்று அதில் ஒரு மயில் குஞ்சு எதிர்பாராத விதமாகக் கால் தவறி கீழே இருந்த ஜன்னல் ஸ்லாப்பில் (Slab) விழுந்தது. இதைக் கண்ட தாய்ப் பெண் மயில், தனது குஞ்சைக் காப்பாற்றப் போராடிக் கொண்டு இருந்தது.
இதைக் கவனித்த அங்கு இருந்தவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனடியாகக் கோவை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஏணி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்திச் சுதாரிப்பாகச் செயல்பட்டு, கீழே விழுந்த மயில் குஞ்சைப் பத்திரமாக மீட்டனர்.
பின்னர், அதனை ஜன்னல் இடுக்கில் இருந்த தாய்ப் பறவை மற்றும் மற்ற 3 குஞ்சுகளுடன் பத்திரமாகச் சேர்த்தனர்.
தனது குஞ்சு மீண்டும் தன்னிடம் சேர்ந்ததை அடுத்து, அந்தப் பெண் மயில் BSNL அலுவலகத்தின் மொட்டை மாடியில் சுற்றித் திரிந்தபடி, தன் குஞ்சுகளை வேறு எந்தப் பறவைகளும் நெருங்காதவாறு தீவிரமாகப் பாதுகாத்து வருகிறது.
மயில் குஞ்சுகள் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் சென்று இடையூறு செய்ய வேண்டாம் எனத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

0 கருத்துகள்: