வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

கேங்வார் கொடூரம் ; நள்ளிரவில் கூலித் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை - இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது !!!

SHARE

 கேங்வார் கொடூரம் ; நள்ளிரவில் கூலித் தொழிலாளி சுத்தியலால் அடித்துக் கொலை - இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது !!!

தப்பிக்க முயன்ற போது கொலையாளிக்குக் கை முறிவு : கிணத்துக்கடவு போலீஸார் அதிரடி நடவடிக்கை !!!

​ கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளியைக் கொடூரமாகக் கொலை செய்து, அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்ட 2 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையின் போது தப்பிக்க முயன்ற கொலையாளி ஒருவருக்குக் கை முறிவு ஏற்பட்டது.

​கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). கல் உடைக்கும் கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது நண்பர்களான மாதேஷ் (22), விஷ்ணு (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோருக்கும் இடையே குழுவாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்து உள்ளது.

​இந்தச் சூழலில், 16 வயது சிறுவனைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுத்து, மது அருந்த வைத்து குறித்து அஸ்வின் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

 இதன் காரணமாகக் குழுவிற்குள் 'கேங்வார்' மோதல் போக்கு உருவாகி உள்ளது.

​சம்பவத்தன்று இரவு மது அருந்தி விட்டு அஸ்வின் தனது நண்பர் விஷ்ணுவின் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது மதுபோதையில் அங்கே வந்த மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரும் சேர்ந்து, தூங்கிக் கொண்டு இருந்த அஸ்வினைச் சுத்தியல் மற்றும் அரிவாளால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தனர்.

​மேலும், இந்த கொடூர சம்பவத்தைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த கிணத்துக்கடவு காவல் நிலையப் போலீசார், அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 15 போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

​இந்நிலையில், இன்று கோடங்கிபாளையம் ரயில்வே பாலம் அருகே மறைந்து இருந்த கொலையாளிகளான மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற மாதேஷ் கீழே விழுந்ததில் அவரது கையில் முறிவு ஏற்பட்டது.

​இதனைத் தொடர்ந்து, மாதேஷைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கையில் கட்டுப் போட்டு போலீசார் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: