கோவை, ஆனந்தாஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட தோசையில் கரப்பான் பூச்சி-வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி....
கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளுடன் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் ஆனந்தாஸ் சைவ உணவகத்தில் காலை உணவு சாப்பிடச் சென்று உள்ளனர்.
அவர்களுக்கு பரிமாறப்பட்ட தோசையை சாப்பிடும் போது, அதில் கரப்பான் பூச்சி செத்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உணவகத்தின் மேற்பார்வையாளரிடம் (சூப்பர்வைசர்) இதுகுறித்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, உணவக நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது மகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறை அல்லது காவல்துறையில் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: