செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

"மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ; நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

SHARE

 "மதுபோதையில் நபரை குத்திக் கொன்றேன்" ;  நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் வாலிபர் சரணடைவு - கோவையில் பரபரப்பு!

தென்னம்பாளையம் சாலையில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு : போலீஸார் தீவிர விசாரணை!

​ கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர், நீலாம்பூர் போலிஸ் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, நீலாம்பூர் காவல் நிலையத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் வந்து உள்ளார். அங்கு இருந்த போலீஸாரிடம் பேசிய அவர், கடந்த 22-ஆம் தேதி இரவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரைக் கத்தியால் குத்தியதாகவும், இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

​மேலும், கொலையான நபரின் உடலை அவினாசி சாலையில் இருந்து தென்னம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், அந்த வாலிபரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் விசாரணையில் சரணடைந்த வாலிபர், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் (29) என்பதும், இவர் கோவை நீலாம்பூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

​இதனைத் தொடர்ந்து, சங்கரேஸ்வரனைப் போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தென்னம்பாளையம் செல்லும் பாதையில் இருந்த பள்ளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. உடம்பில் கத்திக்குத்துக்கான காயங்கள் இருந்ததை உறுதிசெய்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான நபர் யார்? 

இச்சம்பவம் குறித்து நீலாம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரேஸ்வரனைக் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: