வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

SHARE

 இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: நள்ளிரவில் திரண்ட மாணவர்களால் பதற்றம் !!!

 கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் கிடந்ததாகக் கூறி, மாணவர்கள் நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் கற்பகம் கல்லூரியில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று இரவு விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் உணவகப் பொறுப்பாளர்களிடம் உடனடியாகப் புகார் தெரிவித்து உள்ளனர்.

 ஆனால், நிர்வாகத் தரப்பில் உரியப் பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்திற்குள் ஒன்று திரண்டு திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 "தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவை வழங்கி மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்" என முழக்கங்களை எழுப்பியதால் நள்ளிரவில் அங்குப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "உணவின் தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: