"இறைவன் அருளால் தப்பினோம்" ; நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய சூலூர் விவசாயி லோகநாதன் நெகிழ்ச்சி வீடியோ!
39 பேர் கொண்ட குழுவுடன் காத்மாண்டு திரும்புகிறார் : நாளை ஆகஸ்ட் 31 கோவை வருகை; குடும்பத்தினர் நிம்மதி!
நேபாளத்தில் நிலச் சரிவு மற்றும் ஏரி உடைப்பால் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி மாயமானதாகக் கருதப்பட்ட கோவையைச் சேர்ந்த 12 பேரில், சூலூரைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் உள்ளிட்ட 4 பேர் தங்களது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிப் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு உள்ளது பெரும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செங்கடம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் (65), அவிநாசியில் இயங்கி வரும் 'அவிநாசி லிங்கேஸ்வரர் யாத்திரைக் குழு' மூலமாக நேபாளத்திற்கு கைலாச யாத்திரை மேற்கொண்டு இருந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கைலாஸ் மான்சரோவர் பாதையில் ஏற்பட்ட பயங்கர ஏரி உடைப்பு மற்றும் பெருவெள்ளப் பெருக்கின் போது, இவர்கள் குழுவில் சென்ற 39 பேரும் கைலாயம் மலைப் பகுதியில் பாதுகாப்பாக இருந்து உள்ளனர். இதனால் பேரழிவில் சிக்காமல் எந்தவிதப் பாதிப்புமின்றி அனைவரும் நலமுடன் தப்பி உள்ளனர்.
தற்போது லோகநாதன் உள்ளிட்ட 39 பேருக்கும் சீன அரசாங்கம் உதவி செய்து, மாற்றுப் பாதையின் வழியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
தான் பாதுகாப்பாக இருப்பதை லோகநாதன் தனது குடும்பத்தினருக்கு நேரடித் தொலைபேசி அழைப்பு மற்றும் வீடியோ மூலம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
மாயமானதாக அறிவிக்கப்பட்டவர் நலமுடன் உயிர் தப்பி மீண்டும் வருவது குறித்து அவரது குடும்பத்தினரும், செங்கடம்பாளையம் புதூர் கிராம மக்களும் மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ள அவிநாசி யாத்திரைக் குழுவினர், நாளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) விமானம் மூலமாகச் சொந்த ஊரான கோவைக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: