திங்கள், 24 ஆகஸ்ட், 2026

"கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!" - கோவை - பாலக்காடு சாலையில் இளைஞரின் சாகசம் : வீடியோ வைரல்!

SHARE

 "கேரளா பேருந்தின் ஏணியில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!" - கோவை - பாலக்காடு சாலையில் இளைஞரின் சாகசம் : வீடியோ வைரல்!

​ தமிழக - கேரளா எல்லையான கோவை - பாலக்காடு சாலை கக்கசாவடி பகுதியில், கேரளா மாநில அரசுப் பேருந்தின் பின்புற ஏணியில் இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக் கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், க.க.சாவடி சோதனைச் சாவடி எல்லைப் பகுதியில் கேரளா மாநில அரசுப் பேருந்து (KSRTC) ஒன்று வந்து கொண்டு இருந்தது. ​அப்போது, அந்தப் பேருந்தின் பின்புறம் ஊழியர்கள் ஏறுவதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் ஏணியில், இளைஞர் ஒருவர் பிடிமானம் இல்லாமல் நின்று கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பயணித்து உள்ளார்.

பேருந்தின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள், இந்த ஆபத்தான பயணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அதனைத் தங்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர்.

 தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

​சற்று நிலை தடுமாறினாலும் அந்த இளைஞரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், ஓடும் பேருந்துகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசப் பயணங்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீஸார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எல்லைக் காவல் சாவடியில் ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: