திங்கள், 24 ஆகஸ்ட், 2026

கே.பி.ஆர் நிறுவனம் முறைகேடாகச் சொத்து பறிப்பு!" - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வயது மூதாட்டி தர்ணா - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா ரத்து செய்யப்பட்டதாகக் புகார்!

SHARE

 "கே.பி.ஆர் நிறுவனம் முறைகேடாகச் சொத்து பறிப்பு!" - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76 வயது மூதாட்டி தர்ணா - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பட்டா ரத்து செய்யப்பட்டதாகக் புகார்!

 கோவை, கே.பி.ஆர் நிறுவனம் தனது குடும்பத்தின் பூர்வீகச் சொத்தை முறைகேடாக வாங்கியதாகக் குற்றம்சாட்டி, 76 வயதான மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி ஆர்.மணி என்பவருக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்து தொடர்பாக, தனியார் கேபிஆர் நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே தகராறு நிலவி வருகிறது.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் இதுகுறித்து முடிவெடுக்க 8 வார கால அவகாசம் வழங்கி இருந்தது.

நீதிமன்றம் அவகாசம் அளித்து இருந்த நிலையில், தனது தரப்பு ஆவணங்கள் மற்றும் விளக்கங்களைப் பெறாமலேயே, மறுநாளே மணி பெயரில் இருந்த பூர்வீகச் சொத்திற்கான பட்டாவை கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் (RTO) திடீரென ரத்து செய்ததாக மூதாட்டி குற்றம்சாட்டினார்.

கே.பி.ஆர் நிறுவனம் தனது பூர்வீகச் சொத்தை முறைகேடாகக் கைப்பற்றிக் கொண்டதாகவும், அதற்கு அதிகாரிகளும் துணை போயுள்ளதாகவும் அவர் பகிரங்கமாகப் புகாரளித்தார்.

பட்டா ரத்து உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மூதாட்டி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த போலீஸார் மூதாட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று நேரில் மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: